கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத் போட்டி - பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத் போட்டி - பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத் போட்டி - பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உத்தரப் பிரதேச மாநில சடடப்பேரவை தேர்தலையொட்டி பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் கோரக்பூர் தொகுதியிலிருந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் முக்கிய தொகுதிகள் மற்றும் நட்சத்திர வேட்பாளர் குறித்து பார்க்கலாம்.

மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் 58 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள நிலையில் 57 பெயர்களைக் கொண்ட பட்டியலும், 55 தொகுதிகளை கொண்ட இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான 48 பெயர்களைக் கொண்ட வேட்பாளர் பட்டியலும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 107 பெயர்களை கொண்ட இந்த முதல் வேட்பாளர் பட்டியலில் 44 வேட்பாளர்கள் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில் ஓபிசி தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் சேர்ந்து இருந்ததன் காரணமாக அதை சரிகட்ட ஓபிசி பிரிவினருக்கு முதல் வேட்பாளர் பட்டியலில் முக்கியத்துவம் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 40 சதவிகிதம் பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி 107 வேட்பாளர்களில் 10 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கி உள்ளது. அதேபோல பட்டியலினத்தவர்களைப் பொறுத்தவரை 19 பேருக்கு அக்கட்சி வாய்ப்பு வழங்கி உள்ளது

இந்த முதல் வேட்பாளர் பட்டியலில் தற்போது பதவியில் உள்ள 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலந்த்சர் மாவட்டத்தில் மட்டும் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் நான்கு பேருக்கு மறு வாய்ப்பு தர பாஜக மறுத்துள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பொறுத்தவரை அயோத்தி தொகுதியில் போட்டியிடுவார் என யூகங்கள் சொல்லப்பட்ட நிலையில் அவரது சொந்த தொகுதியான கோரக்பூர் தொகுதியிலேயே அவர் களம் இறக்கப்பட்டு உள்ளார். இந்த தொகுதி 5 முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கண்ட யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக உள்ள தொகுதி ஆகும். அதேபோல துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள சிராது தொகுதியில் களம் காண்கின்றார்

உத்தரப் பிரதேசத்தின் முக்கியமான தொகுதிகளான சர்தானா தொகுதியில் சங்கீத் சோம், மீரட் தொகுதியில் அமித் அகர்வால், நொய்டா தொகுதியில் பங்கச் சிங், சாகிபாபாத் தொகுதியில் சுனில் வர்மா, ஹஸ்டினபூர் தொகுதியில் டினேஷ் கர்திக், மௌலான தொகுதியில் தர்மேஷ், சிராத்து தொகுதியில் கேஷப் மௌரியா ஆக்ரா தொகுதியில் பேபி ராணி மவுரியா, காசியாபாத் தொகுதியில் அப்துல் கார்க், லோனி தொகுதியில் நந்த் கிஷோர் உள்ளிட்டோரும் களமிறக்கப்பட்ட உள்ளனர்.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com