அதிக எடையுள்ள செயற்கைக்கோளை ஏவிய இந்தியா.. புதிய சாதனை படைத்த இஸ்ரோ!
சுமார் 4,400 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் மாலை 5.26 மணிக்கு சிஎம்எஸ் - 03 செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு எல்விஎம் 3 - எம்5 ராக்கெட் புறப்பட்டது. சிறிது நேரத்தில் ராக்கெட் உரிய சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது. 43.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் 18 ஆயிரம் கிலோ எடை வரை ஏந்திச்செல்லும் திறனுடன் கட்டமைக்கப்பட்டு உள்ளதால் இது ‘பாகுபலி ராக்கெட்’ எனப்படுகிறது. 4,400 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் இந்தியாவிலிருந்து ஏவப்படுவது இதுவே முதல்முறை. எடைமிகுந்த செயற்கைக்கோளையும் தங்களால் ஏவ முடியும் என்பதை உலகிற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது நிரூபித்துள்ளனர்.
இதற்கு முன் எடை மிகுந்த செயற்கைக்கோள்கள் ஃப்ரெஞ்ச் கயானா நாட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வேறு நாட்டு ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு வந்தன. 1,600 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்தச் செயற்கைக்கோள் இந்திய கடற்படைக்கு தேவையான தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும். இதில் விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகள் உள்பட பல்வேறு நவீன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இவை, இந்திய கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதுடன், போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே தொலைத் தொடர்பு சேவையை மேம்படுத்தவும் இது உதவும். அதற்கு ஏற்ப இந்த செயற்கைகோள் விண்ணில் குறைந்தபட்சம் 170 கி.மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 29,970 கி.மீட்டர் தொலைவிலும் புவி வட்டப்பாதையில் குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்தப்படுகிறது.

