எல்லையில் கழுகுப் பார்வை | மே 18-ல் செயற்கைக்கோளை ஏவும் இந்தியா!
பூமியில் எந்த ஒரு இடத்தையும் துல்லியமாக படம் பிடிக்கும் கேமரா கொண்ட செயற்கைக்கோளை இந்தியா வரும் 18ஆம் தேதி விண்ணுக்கு செலுத்த உள்ளது. EOS - 9 என்ற இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி 61 விண்கலன் மூலம் செலுத்தப்பட உள்ளது. RISAT 1B என்றும் அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோளில் உள்ள சி BAND ரேடார், எந்த ஒரு கால நிலையிலும் பூமிப்பரப்பை தெளிவாக படம் பிடிக்கும் திறன் வாய்ந்தது.
குறிப்பாக சீனா, பாகிஸ்தான் உடனான எல்லைப்பகுதியில் உள்ள நகர்வுகளை இந்த செயற்கைக்கோள் மூலம் தெளிவாக அறியமுடியும். ஊடுருவல்கள், பயங்கரவாத செயல்பாடுகள், படைகளின் நகர்வுகளை எளிதில் அறிய முடிவதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு மேலும் பலப்படும் என கருதப்படுகிறது.
இது தவிர விவசாயம், கடல் வளம், வெள்ளம் கண்காணிப்பு, கடலோர பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கும் இந்த செயற்கைக்கோள் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை, 10க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் காண உள்ளனர்.