சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.75 கோடி கேட்கும் இஸ்ரோ..!

சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.75 கோடி கேட்கும் இஸ்ரோ..!
சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.75 கோடி கேட்கும் இஸ்ரோ..!

சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியை தவிர்த்து கூடுதலாக 75 கோடி ரூபாயை‌ வழங்கக்கோரி இஸ்ரோ மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ மேற்கொண்ட சந்திரயான் 2 திட்டத்தில் லேண்டர் தரையிறங்கும்போது பின்னடைவை சந்தித்தது. இதனையடுத்து ‌சந்திரயான் 3‌ திட்டம் மூலம் மீண்டும் நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான பணி‌கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்‌, பணிகளைத் தொடங்க உடனடியாக 75 கோடி ரூபாயை, மத்திய அரசிடம் இஸ்ரோ கேட்டுள்ளது.

20‌‌19-20 ஆம் நிதியாண்டி‌ல் இஸ்ரோவுக்கென 666 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 11 சதவிகிதமாக, கூடுதலாக 75 கோடி ஒதுக்குமாறு இஸ்ரோ கோரியுள்ளது.‌ இதில் இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் மூலதன செலவினங்களுக்காக 60‌ கோடி ரூபாயும், ‌வருவாய் செ‌லவினங்களின் கீழ் 15 கோடி ரூபாயும் கேட்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மத்திய அரசு வழங்கியுள்ள 666 கோடி ரூபாயில் 8.6 கோடி ரூபாயை விண்வெளியில் மனிதரை அனுப்பும் திட்டத்திற்கு இஸ்ரோ ஒதுக்கியுள்ளது.மேலும் 12 கோடி ரூபாய், சிறிய ரக செயற்கைக்கோள்களை அனுப்பும் செயற்கைக்கோள் ஏவுகணை தயாரிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. 120 கோடி ரூபாய் ஏவுகணைகளை ஏவும் தளத்திற்கான வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் மிகவும் அதிகப்பட்சமாக 516 கோடி ரூபாய் செயற்கைக்கோள்கள் வடிவமைக்க மற்றும் உருவாக்க கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com