இஸ்ரோவில் தொடரும் பதவிவிலகல்கள்.. பாதிக்கப்படும் முக்கியத் திட்டங்கள்.. புதிய கட்டுப்பாடுகள்!
இஸ்ரோவில் இருந்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ராஜினாமா செய்வதால் முக்கிய திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் ராஜினாமாவிற்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
செய்தியாளர்: பால வெற்றிவேல்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் இருந்து சமீபகாலமாக வெளியேறும் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. அதிகாரப்பூர்வமாக இஸ்ரோவால் வெளியிடாவிட்டாலும் இதுவரை 100 முதல் 120 விஞ்ஞானிகள் தங்களது பொறுப்பில் இருந்து வெளியேறி தனியார் நிறுவனங்களிலோ அல்லது வேறு நாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இணைவது அதிகரித்து வந்தது. குறிப்பாக பெங்களூருவில் இயங்கும் யூ.ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்திலிருந்து 80 முக்கிய விஞ்ஞானிகளும், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இருந்து சுமார் 30 பேரும் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகப்படியான பணி அழுத்தம், குறைந்த ஊதியம், பணி உயர்வின் சுணக்கம், நிர்வாக அரசியல் உள்ளிட்ட காரணங்களினால் ராஜினாமா செய்யும் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. அதில் பணியாற்றும் விஞ்ஞானிகள் பலர் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், எல்.வி.எம் ராக்கெட் திட்டம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் தொழில்நுட்ப ரீதியாக இந்தத் திட்டங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றிய விஞ்ஞானிகள் வெளியேறுவதால் திட்டங்கள் சுணக்கம் அடைவதற்கு வாய்ப்பாக அமையும் என்பதால், மத்திய அரசு வெளியேறும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் தன்னார்வ ஓய்வு (VRS), ராஜினாமா கோரிக்கைகளை இனி வழக்கமான நடைமுறையாக ஏற்கக் கூடாது என்று விண்வெளித் துறை உத்தரவிட்டுள்ளது. ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்ட உள்துறை சுற்றறிக்கையில், அண்மைக்காலமாக ககன்யான் மற்றும் பிற முக்கிய விண்வெளித் திட்டங்களில் ஈடுபட்டுள்ள 'குரூப்-ஏ' அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களிடமிருந்து தன்னார்வ ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் பாதிப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ககன்யான் அல்லது பிற முக்கிய திட்டங்களில் பணியாற்றும் 'குரூப்-ஏ' அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் தன்னார்வ ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகளை அந்தத் திட்டங்கள் நிறைவேறும் வரை ஏற்க வேண்டாம் என்று அனைத்து இஸ்ரோ மைய இயக்குநர்கள் மற்றும் பிரிவு தலைவர்களுக்கும் விண்வெளித் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், விஞ்ஞானி/பொறியாளர்-எஸ்ஜி பதவி மற்றும் அதற்கு கீழ் உள்ள அதிகாரிகளிடமிருந்து வரும் ராஜினாமா அல்லது தன்னார்வ ஓய்வு கோரிக்கைகள், சம்பந்தப்பட்ட மைய இயக்குநர்களின் பரிந்துரையுடன் இறுதி முடிவுக்காக விண்வெளித் துறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 நவம்பர் 25-ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவின் மூலம், விஞ்ஞானி/பொறியாளர்-எஸ்ஜி நிலை வரையிலான அதிகாரிகளின் தன்னார்வ ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகளை மைய இயக்குநர்களே ஏற்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது வெளியிடப்பட்ட புதிய உத்தரவு மூலம் அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் 2025–26 ஆண்டு அறிக்கையின்படி, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் சுமார் 1,050 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஒப்புதல் பெற்ற கேடர் மறுசீரமைப்பின் மூலம் 466 திட்டப் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டதுடன், சுமார் 460 உயர்நிலைப் பதவிகளும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

