3 ஆண்டுகளில் ரூ.6,289 கோடி வருவாய் - சாதிக்கும் இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் வணிகப் பிரிவு கடந்த மூன்று ஆண்டுகளில் 239 செயற்கைகோள்களை ஏவி, 6 ஆயிரத்து 289 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டியிருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் விண்வெளிக்கு செலுத்தப்பட்ட சந்திரயான் 2 மூலம் இந்தியாவையும், இஸ்ரோவையும் உலக நாடுகள் உற்று நோக்கியுள்ளன. விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ தனது கால்தடத்தை அழுத்தமாக பதித்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரோ சார்பில் வணிக ரீதியாக வருவாய் ஈட்டப்பட்டதா என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோவின் வணிக ரீதியான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக, விண்வெளித் துறை கட்டுப்பாட்டின் கீழ் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (newspace india limited) என்ற அமைப்பை உருவாக்கி இருப்பதாக கூறினார்.
இந்த அமைப்பு சர்வதேச விண்வெளி சந்தைக்கு ஏற்ப வணிக ரீதியிலான திட்டங்களை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் வணிக ரீதியாக மட்டும் 239 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு, அதன் மூலம் 6 ஆயிரத்து 289 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டிருப்பதாகவும், அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.