நீடிக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்.. கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் வருமா? இந்திய வர்த்தம் பாதிக்குமா?

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 8வது நாளாக நீடிக்கும் நிலையில், இந்திய வர்த்தகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா? இல்லையா? என்பதை விரிவாக பார்ப்போம்..
israel - hamas war
israel - hamas warpt web

சர்வதேச பொருளாதாரத்தில் ஒரு பிரச்னை நிகழ்ந்தால், அது எல்லா நாடுகளிலும் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. அந்த வகையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 8வது நாளாக நீடிக்கும் நிலையில், இந்திய வர்த்தகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா? இல்லையா? என்பதை விரிவாக பார்ப்போம்..

இஸ்ரேல் ஹமாஸ் போர்
இஸ்ரேல் ஹமாஸ் போர்pt web

இந்திய வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா இஸ்ரேல் ஹமாஸ் போர்?

இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போரின் தீவிரம், பல ஆண்டுகளில் இல்லாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இந்தச் சூழலில், இந்தியாவின் வர்த்தகத்திலும் இதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும் என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள். முக்கியமாக, வான்வழி, கடல்வழி மற்றும் நிலப்பரப்பு வழியாகவும் தாக்குதல் நடப்பதால், இஸ்ரேலுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஆபத்து அதிகமாக உள்ளது.

இந்தியா இஸ்ரேல் இடையேயான வர்த்தகம்:

இதன் காரணமாக, இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு காப்பீட்டிற்கான பிரீமியத் தொகையும், ஏற்றுமதி செய்வதற்கான செலவினங்களையும் இந்திய அரசின் கீழ் செயல்படும் ஏற்றுமதி மற்றும் கடன் உத்தரவாதத்திற்கான அமைப்பு அதிகரிக்கும் எனக் கூறுகின்றனர். எனவே அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்து ஈட்டும் லாபம் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். கடந்த 2 நிதியாண்டுகளாக இஸ்ரேலுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வது 75 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டில், சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்த நிலையில், அது 2022-23 ஆம் நிதியாண்டில் சுமார் 68 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

israel war
israel warpt desk

இரு நாடுகளுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தகம்:

அதேபோல், 2022-2023 ஆம் நிதியாண்டில் இஸ்ரேலுக்கு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தியா டீசலை ஏற்றுமதி செய்துள்ளது. அடுத்ததாக, பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலும், சுமார் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களையும் இஸ்ரேலும் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதுதவிர, பொட்டாசியம் குளோரைடு 861 கோடி ரூபாய் மதிப்பிலும், 490 கோடி ரூபாய் மதிப்பில் களைக் கொல்லிகளையும் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

மென் பொருள் சேவையில் இஸ்ரேலுக்குத் தேவையான software development, IT consultIng, data processIng போன்றவைகளையும் இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. அதேநேரம், 2022-23 ஆம் நிதியாண்டில் இஸ்ரேலில் இருந்து 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, இந்தியாவில் உள்ள பெரிய மருத்துவமனைகள் இஸ்ரேலில் இருந்து மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்கின்றன. இதுதவிர, இஸ்ரேலில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் சுகாதாரத்துறை, மாற்று எரிசக்தித்துறை, ராணுவ தளவாடங்கள், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை செய்துள்ளன. இருநாடுகளும் தடையற்ற வர்த்தகத்தில் கையெழுத்திட்டுள்ளன.

oil farm
oil farmpt desk

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் வருமா?

இது ஒருபுறமிருக்க போர் காரணமாக வளைகுடா நாடுகளில் பதற்றம் தொற்றியுள்ள நிலையில், குறுகியகால அடிப்படையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் தாறுமாறாக ஏறத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதம் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலையேற்றம், இறக்குமதிக்கான செலவினங்களை அதிகரிக்கும். இதனால், உள்நாட்டில் பணவீக்கம் உயரும் சூழலும் உருவாகக்கூடும்.

ஏற்றுமதிக்கு பெரிதும் துணைபுரியும் துறைமுகங்கள்?

மிகப்பெரிய இஸ்ரேலிய துறைமுகமான ஹைஃபா, தாக்குதல் நடைபெற்று வரும் காஸாவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மற்றொரு பெரிய துறைமுகமான அஷ்டோத், ஹைஃபா துறைமுகத்துக்கும் தொலைவிலேயே இருக்கிறது. இதனால் பாதிப்புகள் பெரிதாக இருக்காது என்றாலும்,இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் துறைமுகங்கள் ஹைஃபா துறைமுகத்தில் சுமார் 70 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது. எனவே, அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இஸ்ரேலுடனான இந்தியாவின் வணிகப் பொருள் வர்த்தகம் செங்கடலில் அமைந்துள்ள ஈலாட் துறைமுகம் மூலமாகவே நடைபெறுகிறது. துறைமுகங்களில் பாதிப்புகள் ஏற்படுமாயின் அது இருநாட்டு வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

Haifa port
Haifa portpt desk

இஸ்ரேல் அரபு நாடுகள் இடையேயான போர்:

முன்னதாக, 1967 ஆம் ஆண்டில் இஸ்ரேல் - அரபு நாடுகளுக்கு இடையே 6 நாட்கள் தொடர்ந்த போர் நினைவிருக்கலாம். சர்வதேச அளவில் கப்பல் போக்குவரத்திற்கு முக்கிய பங்களிக்கும் சூயஸ் கால்வாயை எகிப்து சுமார் 8 ஆண்டுகள் வரை மூட இந்த போர் முக்கிய காரணமாக அமைந்தது. மேற்காசிய நாடுகள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய சூயஸ் கால்வாயைதான் பயன்படுத்தி வந்தன. இதற்கிடையில், 1973 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் நடந்த மற்றொரு போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இது சர்வதேச பொருளாதாரத்தை நெருக்கடியில் வைத்திருந்தது.

இஸ்ரேலில் காஸா பகுதியில் மட்டுமே தாக்குதல்கள் நடக்கும் நிலையில், மற்ற பகுதிகளில் பெரிய பாதிப்பு இல்லையெனக் கூறப்படுவதால் வர்த்தகத்தில் பெரிய அளவிற்கு இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் எவ்வளவு காலத்திற்கு போர் நீடிக்கும் என்பதை பொறுத்தே பாதிப்புகள் பற்றி கூறமுடியும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com