‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கத்தை எழுப்பிய இஸ்லாமிய அமைச்சர்
பீகார் சட்டப்பேரவை வளாகத்தில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கத்தை ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முஸ்லீம் அமைச்சர் குர்ஷித் என்ற ஃபெரோஸ் அகமது எழுப்பியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஃபெரோஸ் அகமது கரும்பு ஆலை தொழில்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். இவர் சட்டப்பேரவை வளாகத்தில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிட்டார். இதற்கு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த அறிஞர்களும், அரசியல் பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தனது செயலால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், மாநில நலனுக்காக ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷத்தை எழுப்ப தயங்க மாட்டேன் என்றும் அமைச்சர் ஃபெரோஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாட்னாவில் உள்ள இமாரத் ஷரியா என்ற முஸ்லிம் அமைப்பின் நிர்வாகி முஃப்தி சோஹைல் அகமது காஸ்மி கூறுகையில், இஸ்லாமிய மதத்தில் யார் ஒருவர், ரசூல் என்ற இஸ்லாமிய இறைத் தூதரையும், இந்து கடவுளான ராமரையும் ஒரு சேர வழிபடுகிறாரோ அவர் தானாகவே இஸ்லாமிய மதத்தில் இருந்து விலக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.