டெல்லியைக் குறிவைத்து தாக்குதல்? - என்.ஐ.ஏ சோதனையில் 10 பேர் கைது
டெல்லி, உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் நடத்திய சோதனையில், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கருதப்படும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை முதலே இரண்டு மாநிலங்களில் 17 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்டுவர்கள் வட இந்தியாவில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக டெல்லியை குறித்து தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினர்.
டெல்லியில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு குறித்து நடத்திய சோதனை பற்றி ஐஜி பேட்டி அளித்தார். அப்போது, “டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் 17 இடங்களில் ஐ.எஸ் பாணியில் இயங்கும் ‘ஹர்கட் உல் ஹர்ப் இ இஸ்லாம்’ என்ற அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்களை குறிவைத்து சோதனைகள் நடத்தப்பட்டது. டெல்லியின் சீலம்புர், உத்தரப் பிரதேசத்தின் ஹபுர், மீரட் மற்றும் லக்னோ ஆகிய பகுதியில் நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையில், அதிக அளவிலான வெடிப் பொருட்கள், ஆயுதங்கள், ராக்கெட் செய்வதற்கான வெடி பொருட்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ7.5 லட்சம் ரொக்கம், சுமார் 100 செல்போன்கள், 135 சிம் கார்டுகள், லேப்டாப்கள் மற்றும் மெமரி கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேகத்தின் பேரில் 16 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், 10 பேரை அதில் கைது செய்தோம். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அவர்களின் தலைவன் என்று தெரிகிறது. 5 பேர் உத்தரப் பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். தேடுதல் பணி இன்னும் நடைபெற்று வருகிறது” என்று அவர் கூறினார்.

