இந்தியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் திட்டம் பலிக்காது: ராஜ்நாத்
நாடு முழுவதும் 90 ஐஎஸ் தீவிரவாதிகளின் அபிமானிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் திட்டம் பலிக்காது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த அறிக்கையை ராஜ்நாத் சிங் வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் ஏராளமான இஸ்லாமியர்கள் இருந்தும் ஐஎஸ் அமைப்பால் இங்கு நுழைய முடியவில்லை என்றார். நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையில் 90 ஐஎஸ் அமைப்பின் அபிமானிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஒருபோதும் இந்தியாவில் ஐஎஸ் அமைப்பால் கால்பதிக்க முடியாது என்றார். மேலும் பேசிய அவர், கடந்த காங்கிரஸ் அரசில் நிகழ்ந்ததை விட நக்சல் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42சதவீதம் குறைந்துள்ளது. விரைவில் இந்திய எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு நிரந்திர தீர்வு காணப்படும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.