மிக இளம் வயது முதல்வராவாரா தேஜஸ்வி யாதவ்? - பீகாரில் நாளை வாக்கு எண்ணிக்கை!

மிக இளம் வயது முதல்வராவாரா தேஜஸ்வி யாதவ்? - பீகாரில் நாளை வாக்கு எண்ணிக்கை!
மிக இளம் வயது முதல்வராவாரா தேஜஸ்வி யாதவ்? - பீகாரில் நாளை வாக்கு எண்ணிக்கை!

பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், நாளை வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தேஜஸ்வி யாதவ் முதல்வராவார் என கூறும் நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை எண்ணப்படுகின்றன. நான்குக்கும் அதிகமான கூட்டணிகள் களத்தில் இருந்தாலும் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணிக்கும், நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணிக்கு தான் நேரடி போட்டி நிலவுகிறது. 

நான்காவது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் உள்ள நிலையில், அவரை வீழ்த்த ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மகா கூட்டணி அமைக்கப்பட்டது. 

இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பின்பு நடைபெற்ற பொதுத் தேர்தல் என்பதால், தேர்தலின்போது பல்வேறு கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டன. தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு இணையாக தேஜஸ்வி யாதவ் கூட்டங்களுக்கும் மக்கள் கூடினர். இரு கூட்டணிகளுமே இளைஞர்களை முன்வைத்து தங்களது பரப்புரையை மேற்கொண்டன. 

இளைஞர்களுக்கு 10 லட்சம் வேலைகள் வழங்கப்படும் என மகா கூட்டணி உறுதி அளித்த நிலையில், 19 லட்சம் வேலைகள் வழங்கப்படும் என பதிலடி தந்தது தேசிய ஜனநாயக கூட்டணி. மேலும் கூடுதலாக இந்தி மொழியில் மருத்துவம், பொறியியல் கல்வி கற்பிக்கப்படும் எனவும் வாக்குறுதி தந்தது. தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. 

பீகார் தேர்தலில் எப்போதும் சாதி ரீதியான வாக்குகள் பிரியும் நிலையில், இந்த தேர்தல் லாலு பிரசாத் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வான் பங்களிப்பு இல்லாமல் நடைபெற்றுள்ளது. லாலு சிறையில் உள்ள நிலையில், உடல் நலக்குறைவால் ராம்விலாஸ் பாஸ்வான் அண்மையில் காலமானார். தொகுதி பங்கீடு பிரச்னையில் கடைசி நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய சிராக் பாஸ்வான் தனித்து களம் கண்டுள்ளார். அவர் பிரிக்கும் வாக்குகள் யாருக்கு சாதகம் என தெரியவில்லை.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை, தேஜஸ்வி ஆட்சியை பிடிப்பார் என கூறியுள்ளன. அப்படி நிகழ்ந்தால் மிக இளவயது முதல்வர் என்ற பெருமையை பெறுவார் இன்று பிறந்தநாள் கொண்டாடும் 31 வயதான தேஜஸ்வி யாதவ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com