மெட்டாவுக்கு 3 நாள் கெடு.. சட்டச் சிக்கலுக்கு ஆளாகிறதா FB? 'Safe Harbour' என்ன ஆகும்?
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
ஒரு சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட Facebook வீடியோ பரபரப்பைக் கிளப்பியுள்ளது. காரணம், அது Facebookஇல் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதுதான். இந்நிலையில், ஜூலை 23ஆம் தேதி வெளியிடப்பட்ட பிரதமர் மோடியின் வீடியோவை தற்காலிகமாக நீக்கிய விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழு உத்தரவிட்டுள்ளது.
பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தலைமையிலான குழு, 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதியான பிரதமரின் வீடியோ நீக்கப்பட்டது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கடுமையாக விமர்சித்தது. இந்த விவகாரத்தில், நடவடிக்கை எடுக்கத் தவறினால், மெட்டாவுக்கான 'Safe Harbour' சட்டப் பாதுகாப்பு நீக்கப்படும் என்றும், அதன் பின்னர் சமூக வலைதள அதிகாரிகள் மீது நேரடியாக வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என்றும் குழு எச்சரித்துள்ளது.
மாணவர் போராட்டங்கள் நடைபெற்ற காலத்தில், தேர்வுத் தாள்கள் கசிவைத் தடுக்கும் கடுமையான நடவடிக்கைகள் குறித்து இளைஞர்களுக்கு உறுதியளிக்கும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்ட முதல் செல்ஃபி வீடியோ இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ முதலில் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு பின்னர் ஃபேஸ்புக்கிலும் பகிரப்பட்டது. ஆனால் ஃபேஸ்புக்கில் அது சில நேரம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. கடும் எதிர்ப்புக்குப் பிறகு மெட்டா அந்தப் பதிவை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தது.
இந்த வாரம் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்த மெட்டா அதிகாரிகள், இது தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதாகக் கூறி மன்னிப்பு தெரிவித்தனர். எனினும், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அந்த விளக்கத்தை ஏற்க முடியாது என்றும், தொழில்நுட்ப நிறுவனம் என்பதால் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காதவகையில் தனது அமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இதற்கிடையில், இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயேக உள்ளடக்கங்கள் மற்றும் விளம்பரங்களும் மெட்டா அரசின் கண்காணிப்பில் உள்ளது. இந்த விதிகளை மீறினால், கூகுள், யூடியூப், எக்ஸ், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நாடாளுமன்றக் குழு எச்சரித்துள்ளது.

