இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேல் வரலாறு

இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேல் வரலாறு
இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேல் வரலாறு

துண்டுபட்டு கிடந்த ராஜ்ஜியங்களை இணைத்த இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

குஜராத்தில் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் சர்தார் வல்லபாய் படேல். சிறு வயது முதலே படிப்பில் சிறந்த மாணவராக விளங்கினார். வழக்கறிஞராக வேண்டும் என்ற தாக்கத்தில் இருந்த அவர், தனது 25 வயதில் 'டிஸ்ட்ரிக்ட் பிளீடர்' படிப்பை முடித்து கோத்ராவில் வழக்கறிஞராக தொழில் செய்யத் தொடங்கினார். பின்னர் 1910ஆம் ஆண்டு லண்டன் சென்று பட்டம் படித்து முதல் மாணவராக தேர்வானார். பிறகு நாடு திரும்பிய அவர் அகமதாபாத்தில் வழக்கறிஞராக பணிபுரியத் தொடங்கினார். 

அகமதாபாத்தில் வழக்கறிஞர் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்னைகளுக்காக போராடி, அவர்களின் இதயங்களில் இடம் பிடித்தார். 1917ஆம் ஆண்டு முதன்முறையாக மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது மகாத்மா காந்தியின் உரையைக் கேட்ட அவர், வழக்கறிஞர் தொழிலை உதறிவிட்டு தன்னை சுதேசி இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அடுத்து கேடா, பார்டோலி உள்ளிட்ட இடங்களில் மக்களுக்காக போராட்டம் நடத்திய படேலுக்கு போராட்டங்களும், சிறைவாசமும் வாடிக்கையாகிப் போனது. 

அதனைத்தொடர்ந்து காந்தி நடத்திய பல போராட்டங்களில் தன்னை முதன்மையானவராக ஈடுபடுத்திக்கொண்டார். இரண்டாவது வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு மகாத்மா காந்தி, படேல் கைது செய்யப்பட்டு, எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது முதல் காந்தியுடன் படேலுக்கு நெருக்கம் ஏற்பட்டு பின்னர் அது வளர்ந்தது. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அப்பதவிகளில் அவர் ஆற்றிய பணிகள் அத்தனை சாதாரணமானது அல்ல. 

நாடு முழுவதும் துண்டு துண்டாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்தது. 565 ராஜ்ஜியங்கள் ஆண்டு கொண்டிருந்தன. சிதறுண்டு கிடந்த நாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலிடம் ஒப்படைத்தார் பிரதமர் ஜவஹர்லால் நேரு. பல சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நாட்டை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து "இரும்பு மனிதர்" எனப் பெயர் பெற்றார். அவர் தனது 75ஆவது வயதில் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி காலமானார். அவரது சாதனைகளை போற்றும் வகையில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1999ஆம் ஆண்டு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். தற்போது இவருக்காக 597 அடியில் உலகிலேயே மிகப்பெரிய சிலை குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com