இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா தனது காதலரை திருமணம் செய்ய கொடைக்கானல் சார்பதிவாளரிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளார்.
இரோம் ஷர்மிளா, தற்போது கொடைக்கானலில் தங்கி இருக்கிறார். தனது இளமைக்காலம் முழுவதையும் போராட்டத்தில் கழித்த இரோம் சர்மிளா, தேர்தல் கொடுத்த தோல்வியால் மணிப்பூரை விட்டு வெளியேறினார். மணிப்பூர் மக்கள், தேர்தலில் தன்னை தோல்வியடையச் செய்ததால், வேதனையை மறப்பதற்காக கொடைக்கானலில் அவர் குடியேறினார். தனது காதலர், தேஷ்மந்த் கோட்டின்கோவுடன் கொடைக்கானலில் உள்ள அப்சர்வேட்டரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அவர் தங்கியுள்ளார். விரைவில் தனது காதலரைத் திருமணம் செய்துகொள்வேன் என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், காதலருக்கு அவரது நாட்டிலிருந்து கிடைக்கவேண்டிய திருமணம் தொடர்பான அனுமதிக் கடிதத்துக்காக இருவரும் காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த அனுமதி கடிதம் வந்த நிலையில், கொடைக்கானல் பதிவாளர் அலுவலகத்தில் அவர் திருமணத்துக்காக விண்ணப்பித்துள்ளார்.
அந்த மனுவை ஏற்ற அதிகாரிகள், 30 நாட்களுக்கு பிறகு திருமணம் செய்துக்கொள்ளலாம் என்றும் அவகாசம் கொடுத்துள்ளனர். இரோம் சர்மிளாவின் காதலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால், இந்தியாவில் யாருக்கேனும் இந்தத் திருமணத்தில் ஆட்சேபனை உள்ளதா என்பதைத் தெரிவிக்கவே இந்த அனுமதிக் காலம் என்று விளக்கமளித்துள்ள அதிகாரிகள், யாரும் ஆட்சேபனை தெரிவிக்காதபட்சத்தில் திருமணம் நடத்தி வைக்கப்படும் எனக்கூறியுள்ளனர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தேஷ்மந்த் கோட்டின்கோ என்பவரைத்தான் அவர் திருமணம் செய்துகொள்ள உள்ளார்.