புதுப்பிக்கப்பட்ட IRCTC வலைதளத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

புதுப்பிக்கப்பட்ட IRCTC வலைதளத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
புதுப்பிக்கப்பட்ட IRCTC வலைதளத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ரயில்வே தனது இ-டிக்கெட் வலைதளமான ஐ.ஆர்.சி.டி.சி (www.irctc.co.in) மற்றும் அதன் மொபைல் செயலியையும் மேம்படுத்தி புதுப்பித்துள்ளது.

சிறப்பான அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட வலைதளத்தை தொடங்கிவைத்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், "இந்த மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் வலைதளம், முன்பதிவு செய்வதில் பயணிகளுக்கான வசதிகளை அதிகரிக்கும். இந்த வலைதளத்தை மென்மேலும் மேம்படுத்த ஐஆர்சிடிசி தொடர்ந்து பணியாற்றும். டிஜிட்டல் இந்தியா திட்டப்படி, இந்த வலைதளம் தரத்தில் எதற்கும் குறைந்தது இல்லை" என்றார்.

புதுப்பிக்கப்பட்ட ஐஆர்சிடிசி வலைதளத்தின் முக்கிய அம்சங்கள்:


> டிக்கெட் முன்பதிவு செய்யும் நபர் உள்நுழைந்ததும், உணவு முன்பதிவு, தங்கும் அறைகள் மற்றும் விடுதிகள் முன்பதிவு ஆகிய வசதிகளும் ஒருங்கிணைக்கப்படும். பயணிகளின் அனைத்து தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு கிடைக்கும்படி வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

> பயணி ரயில்வே நிலையத்துக்குள் நுழைந்ததும், அவருக்கு தேவையான ஆலோசனைகள், செயற்கை நுண்ணறிவு மூலம் வழங்கப்படும். பிளாட்பாரங்களை தேடுதல் போன்றவற்றில் உள்ள சிரமத்தை இது வெகுவாக குறைக்கும். டிக்கெட் முன்பதிவு செய்வதில் நேரத்தை மிச்சப்படுத்தும்.

> கட்டணத்தைத் திரும்பப் பெறும் நிலவரங்களையும் இந்த வலைதளம் மற்றும் செயலியில் எளிதில் அறிந்துகொள்ளலாம். இதற்கு முன், இந்த அம்சம் எளிதாக இல்லை.

> வழக்கமான அல்லது பிடித்த பயணங்களை எளிதாக முன்பதிவு செய்ய முடியும். ரயில்களை தேடுதல் மற்றும் தேர்ந்தெடுத்தல் முறையும் எளிதாக்கப்பட்டுள்ளது. ரயில் முன்பதிவு குறித்து அனைத்து விவரங்களும் ஒரே பக்கத்தில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், மிக எளிதாக ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.

> கம்ப்யூட்டர்களை அதிகம் பயன்படுத்தாதவர்களும், எளிதில் முன்பதிவு செய்ய வகை செய்யப்பட்டுள்ளது.

> ரயிலில் இருக்கைகள் நிலவரத்தை அறிய புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரயில்களில் டிக்கெட் நிலவரத்தை தாமதமின்றி தெரிவிக்கும்.

> அடுத்தடுத்த தேதிகளில் டிக்கெட்டுகளின் நிலவரமும், அதே பக்கத்தில் தெரிந்துகொள்ள முடியும்.

> பணம் செலுத்தும்போது, பயண விவரங்களும் தெரிவிக்கப்படும். இது பயணம் செய்பவர் தனது பயண விவரத்தை சரிபார்த்துக் கொள்ள உதவும்.

> இந்த வலைதளத்தில் பாதுகாப்பு வசதிகள் அதிகம் உள்ளன.

தற்போது, ஐஆர்சிடிசி இ-டிக்கெட் வலைதளத்தை 6 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். நாள் ஒன்றுக்கு 8 லட்சம் டிக்கெட்டுகளுக்கு மேல் முன்பதிவு செய்யப்படுகிறது. 83 சதவீத முன்பதிவு டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகின்றன.

நேரடி ரயில் போக்குவரத்து இல்லாத இடங்களில், இணைப்பு ரயில்களில் முன்பதிவு செய்வதற்காக ‘ஸ்மார்ட் முன்பதிவு’ அறிமுகம் செய்வது குறித்தும் ஐஆர்சிடி பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்றும் இந்திய ரயில்வே கூறியுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட இந்த வலைதளம் பயன்படுத்துவதற்கு எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்திக்கு அதிக முக்கியவத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், புதுப்பிக்கப்பட்ட https://www.irctc.co.in வலைதளத்தில் ஆங்கிலத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com