வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி! மீண்டும் சர்ச்சை.. மன்னிப்பு கோரிய IRCTC!

வந்தே பாரத் ரயிலில் பயணித்த பயணி ஒருவர், பயணித்தில் வழங்கப்பட்ட உணவில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்ததாக புகாரளித்த நிலையில், இந்திய ரயில்வே கேட்டரிங் நிர்வாகம் (IRCTC) உடனடியாக பதிலளித்துள்ளது.
வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில்X

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ராணி கம்லாபதியில் இருந்து ஜபல்பூர் சந்திப்பு வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணித்த பயணி ஒருவர், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) வழங்கிய உணவில் இறந்த கரப்பான் பூச்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அந்த பயனர், கரப்பான் பூச்சி கடந்த உணவின் புகைப்படங்களை பகிர்ந்தும், எப்போது பயணம் செய்தேன் என்பதன் விவரத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட மற்ற எக்ஸ் பயனர்கள் இதை விமர்சித்தும், அதிகம் பேசுபொருளாகவும் மாற்றிய நிலையில், அந்த பதிவை கண்ட இந்திய ரயில்வே கேட்டரிங் நிர்வாகம் (IRCTC) உடனடியாக பதிலளித்துள்ளது.

நடந்த சம்பவத்திற்கு பெரிய அபராதம் விதிக்கப்பட்டது!

பாதிக்கப்பட்டவர் எக்ஸ் பதிவிற்கு ரிப்ளை செய்துள்ள IRCTC, “ஐயா, உங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நடந்துள்ள அசௌகரியமான விஷயம் தீவிரமாகப் பார்க்கப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட சேவை வழங்குநருக்கு மிகப்பெரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தின் மீதான கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" என்று இந்திய ரயில்வே கேட்டரிங் நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவருக்கு தனியாக இந்திய ரயில்வே சேவா பதிலளித்துள்ளது. அதில், “உங்கள் புகார் RailMadad-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த புகார் எண்ணும் உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS மூலம் அனுப்பப்பட்டுள்ளது” என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

இப்படி நடப்பது இது முதல்முறை அல்ல!

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவில் கரப்பான் பூச்சிகள் கிடப்பது, இது முதல்முறை அல்ல. கடந்த ஜூலை மாதம், போபாலில் இருந்து குவாலியர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணித்த மற்றொரு பயணி, IRCTC வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அப்பயணியின் புகாருக்கு பதிலளித்த ரயில்வே நிர்வாகம், “விரும்பத்தகாத அனுபவத்திற்கு மன்னிப்பு கேட்டு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறியது. ஆனால் எந்த மாற்றமும் நேராமல் மீண்டும் அதேபோலான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது மட்டுமல்லாமல், மீண்டும் அதே பதிலைத்தான் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

என்ன தான் இந்திய ரயில்வே கேட்டரின் சர்விஸ் மன்னிப்பு கோரியிருந்தாலும், தொடர்ந்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com