நடுவானில் கணவன் மனைவி சண்டை: சென்னையில் இறங்கியது கத்தார் விமானம்!

நடுவானில் கணவன் மனைவி சண்டை: சென்னையில் இறங்கியது கத்தார் விமானம்!
நடுவானில் கணவன் மனைவி சண்டை: சென்னையில் இறங்கியது கத்தார் விமானம்!

நடுவானில் கணவன் மனைவி சண்டை போட்டு பிரச்னை ஏற்படுத்தியதால் பாலி செல்ல வேண்டிய கத்தார் ஏர்வேஸ் விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது.

கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தார் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அதில் ஈரான் நாட்டை சேர்ந்த குடும்பம் ஒன்று இருந்தது. நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்த போது, பெண் பயணி ஒருவர், அருகில் தூங்கிக்கொண்டிருந்த கணவரின் செல்போனை நோண்டினார். அப்போதுதான் இன்னொரு பெண்ணுடன் கணவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், திடீரென்று சத்தம் போட்டார். கணவரை கடுமையாகத் திட்டி தீர்த்தார். 
இதையடுத்து விமானப் பயணிகளும் பணியாளர்களும் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தினர். ஆனால், அவர் கோபம் குறையவில்லை. அவர்களையும் திட்டித் தீர்த்தார். அந்தப் பெண் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது விமானம் இந்திய வான் எல்லையில், சென்னை அருகே சென்றுகொண்டிருந்தது. விமானி, சென்னை விமான நிலையத்தில் தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார். கொடுக்கப்பட்டது. இதையடுத்து விமானம் பத்திரமாகச் சென்னையில் தரையிறங்கியது. விமானத்தில் சத்தம் போட்ட பெண்மணி, அவர் கணவர் மற்றும் குழந்தை கீழே இறக்கப்பட்டனர். பின்னர் விமானம் பாலி-க்கு சென்றது.

இதையடுத்து அவர்கள் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் தோகா செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி கத்தார் ஏர்வேஸ் கூறும்போது, ‘மற்ற பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்ததால் அவர்கள் இறக்கிவிடப்பட்டனர். மற்றபடி பயணிகளின் சொந்த விஷயங்கள் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளது. அந்தப் பயணியின் பெயரையும் தெரிவிக்க மறுத்துவிட்டது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com