நபிகளை அவதூறாக பேசியவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் - ஈரானிடம் அஜித் தோவல் உறுதி

நபிகளை அவதூறாக பேசியவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் - ஈரானிடம் அஜித் தோவல் உறுதி
நபிகளை அவதூறாக பேசியவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் - ஈரானிடம் அஜித் தோவல் உறுதி

நபிகள் குறித்து அவதூறாக பேசியவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதியளித்ததாக ஈரான் கூறியுள்ளது.

பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளரான நுபுர் சர்மா கடந்த வாரம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் நபிகள்  குறித்து ஆட்சேபணைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். அதேபோல, டெல்லி பாஜக நிர்வாகி நவீன் ஜிண்டாலும் நபிகள் குறித்து அவதூறான கருத்துகளை கூறியிருந்தார். இது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில், இந்தியாவையும் தாண்டி சர்வதேச அளவில் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியது. இதனைத் தொடர்ந்து, நபிகள் நாயகம் குறித்து பாஜக நிர்வாகிகள் தரக்குறைவாக பேசியதற்காக ஈரான், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இந்தியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

இதையடுத்து, நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பாஜக இடைநீக்கம் செய்தது. நவீன் ஜிண்டால் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். மேலும், அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்தியாவின் இந்த உடனடி நடவடிக்கைக்கு வளைகுடா நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன.

இந்த சூழலில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசேன் அமீர் அப்துல்லாயன் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இதன் ஒருபகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை அவர் சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இதில் அஜித் தோவலிடம் நபிகள் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவிக்கப்பட்ட விவகாரத்தை ஹூசேன் அமீர் எழுப்பியதாக தெரிகிறது. அப்போது, நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என அஜித் தோவல் உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com