சிபிஐயின் புதிய இயக்குநராக நாகேஸ்வர் ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே அண்மைக் காலமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. தொழிலதிபர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கை முடித்துத் தருவதற்கு அலோக் வர்மா 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா குற்றம்சாட்டியிருந்தார். அவர் மீது பதிலுக்கு அலோக் வர்மாவும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். நாட்டின் மிகப் பெரிய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் உயர்பதவி வகிக்கும் இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்தின.
இவ்விவகாரம் சூடுபிடித்து வரும் நிலையில் சிபிஐ தலைமை அலுவலகத்திலேயே சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் ராகேஷ் அஸ்தானா மீதான ஊழல் புகார் தொடர்பாக போலீஸ் துணை கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கெனவே மொயின் குரேஷி தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் தன்னை சந்திக்கும்படி பிரதமர் மோடி சம்மன் அனுப்பியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் சிபிஐயின் புதிய இயக்குநராக நாகேஸ்வர் ராவை தாற்காலிகமாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர் இடையேயான பனிப்போரால் இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.