தேர்வில் காப்பியடிக்க நவீன டெக்னாலஜி: கேரளாவில் சைபர்கிரைம் விசாரணை
தேர்வில் காப்பியடித்த ஐபிஎஸ் அதிகாரியிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்களை சைபர்கிரைம் போலீசார் ஆயவு செய்து வருகிறார்கள். மேலும் கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியின் தொழில் கூட்டாளியை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சஃபீர் கரிம் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி. நாங்குநேரி சப்டிவிஷனில் ஏஎஸ்பியாக பணியாற்றி வரும் சஃபீர் கரீம் பெரும் கெடுபிடிகள் இருக்கும் ஐஏஎஸ் முதன்மைத் தேர்வில் நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி காப்பியடித்ததாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு உதவிய மனைவி ஜாய்சி கைக்குழந்தையுடன் சிறையில் இருக்கிறார். மேலும் தனியார் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் ராம்பாபுவையும் ஹைதராபாத்தில் வைத்து கைது செய்த எழும்பூர் போலீசார் அவரையும் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்திக்கும் போலீசார், உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படையை கேரளாவுக்கு அனுப்பியுள்ளனர். இந்த தனிப்படை போலீசார், கைதான சஃபீர் கரிம் கேரளா, கொச்சின் பகுதியில் நடத்திவரும் ஐஏஎஸ் அகாடமி மையங்களில் விசாரணை நடத்தினர். சபீரின் உறவுப்பெண், தொழில்கூட்டாளி சம்ஜத் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
இதற்கிடையே தேர்வில் காப்பியடித்தது தொடர்பாக தேர்வு மையமாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பா அளித்துள்ள புகாரில், சபீரின் தேர்வு பதிவெண்ணை குறிப்பிட்டு, அவர் சட்டையில் ஒரு செல்போன், டைப் செய்யப்பட்ட நோட், சட்டையில் இணைக்கப்பட்ட ப்ளூடூத் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காப்பியடித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார்.
இந்நிலையில், சபீர் கரிமிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், ப்ளுடூத்தை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பியுள்ளனர். இவற்றை ஆய்வு செய்துவரும் சைபர்கிரைம் போலீசார், செல்போனில் பதிலாக உள்ள படங்கள், வீடியோக்கள், தொலைபேசி எண்கள், உரையாடல்கள் போன்றவற்றை சோதித்து வருகிறார்கள்.