”நம்பி ஏமாந்துட்டோம்” - ஐபிஎல் டிக்கெட் விற்பனை பெயரில் இப்படியெல்லாம் மோசடி நடக்கிறதா! ஷாக் புகார்

சென்னை, பெங்களூர் ஐ.பி.எல் டிக்கெட் மோசடி காரணமாக ஆவடி மாநகர காவல் நிலையத்தில் இணையவழி குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட்கள் (மாதிரி), பணம் அனுப்பியவர்கள் ஸ்க்ரீன் ஷாட்
டிக்கெட்கள் (மாதிரி), பணம் அனுப்பியவர்கள் ஸ்க்ரீன் ஷாட்pt web

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி கடந்த 22 ஆம் தேதி நடந்தது. இந்த போட்டியைக் காண சென்னை சேப்பாக்கம் மைதானமே நிரம்பி வழிந்தது. ஆனாலும் டிக்கெட்டிற்கு பணம் கொடுத்தும் மைதானத்திற்குள் நுழைய முடியாமல் பலரும் தவித்தனர்.

இணையத்தில் போட்டிக்கான டிக்கெட் வாங்கிய நிலையில், தாங்கள் தற்போது ஏமாற்றப்பட்டுள்ளதாக வேதனையோடு மக்கள் தெரிவித்தனர். டிக்கெட்டிற்கான பணத்தை கொடுத்தபின், போட்டி நடக்கும் மைதானத்திற்கு வந்தபின் டிக்கெட் கொடுப்பதாக தெரிவித்ததாகவும், வந்தபின் அவர்களை தொடர்பு கொண்டால், தொலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். போட்டி நடந்து முடியும் வரை கொடுத்த பணத்திற்கு டிக்கெட்களை வாங்க முடியாமல் மக்கள் பரிதவித்தனர். மோசமான நிர்வாகமே இதற்கு காரணம் எனவும் சிலர் குற்றம் சாட்டியதை காண முடிந்தது.

இந்நிலையில், சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த நிஷாத் (21) ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலிசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 22ம் தேதி சென்னை - பெங்களூர் இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனைக்கு உள்ளதாக எக்ஸ் சமூக வலைதளத்தில் விளம்பரம் ஒன்றை கண்டேன். அதில் உள்ள தொடர்பு எண்ணில் அழைத்த போது, ஹரி கிருஷ்ணன் என்பவர், பணம் கொடுத்தால் டிக்கெட் வாங்கி தருவதாக உறுதியளித்தார்” என தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த உறுதியின் காரணமாக, 3ஆயிரம், 4ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகள் சுமார் 31 எண்ணிக்கைகளுக்கு நிஷாத் 1லட்சம் ரூபாய் பணத்தை ஹரி கிருஷ்ணன் என்பவருக்கு இணைய பணப்பரிமாற்றம் செய்துள்ளார்.. இந்த நிலையில் ஐபிஎல் போட்டி முடிவடைந்தும் இதுவரை டிக்கெட்டும் வழங்கவில்லை அவரது பணமும் தரவில்லை என குற்றம்சாட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்துள்ளார்.

மொத்தம் ரூ. 1 லட்சத்து 500 ரூபாய்

பாதிக்கப்பட்ட நிஷாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆன்லைனில் டிக்கெட் கொடுப்பதாக ஏமாற்றிவிட்டார்கள். ட்விட்டரில் டிக்கெட்கள் வாங்கித் தருவதாக சொன்னார்கள். நானும் அவரை நம்பி மெசேஜ் செய்து கேட்டேன். எனது நண்பர் மூலம் அவரை நேரில் பார்க்கவைத்து அதன்பின்பே பணம் அனுப்பினோம். 14 டிக்கெட்களை தலா நாலாயிரம் ரூபாய்க்கு தருவதாக சொன்னார்கள். ரூ.3500 டிக்கெட்கள் மூன்று. ரூ.3000 டிக்கெட் 5. ரூ.2000 டிக்கெட் 8 என மொத்தம் 31 டிக்கெட்கள் ஆகிவிட்டது. மொத்தம் ரூ.1 லட்சத்து 500 ரூபாய் ஏமாந்துள்ளேன். அவர் இப்போதுவரை தொடர்பில்தான் உள்ளார். ஆனால் பணம் தர மாட்டேன் என்கிறார்.

அவரது ஆதார் வைத்து தேடிப்பார்த்ததில், அவர் ஏற்கனவே ரிமாண்ட் ஆகி இருப்பது தெரியவந்துள்ளது. இதன்பின்பே சைபர் க்ரைமில் புகாரளிக்க வந்தோம். அனைத்தும் ஆன்லைனில் தான் நடந்தது. முதலில் 15 ஆம் தேதி தருவதாக சொன்னார்கள். பின் 18 ஆம் தேதி சொன்னார்கள். 20, 21 என அடுத்தடுத்த நாள் சொன்னார். பின்னர் நேரில் வந்து வாங்கிக்கொள்ளும்படி சொன்னார்கள். போட்டி நடக்கும் நாளில் மைதானத்திற்கே சென்றேன். காலை 10 மணிக்கு போனேன். மாலை 7.30 மணியளவில் அங்குதான் இருந்தேன். போட்டி ஆரம்பம் ஆகும் வரை எனக்கு டிக்கெட் கொடுக்கவில்லை.

பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக சொன்னார். மூன்று நாள் ஆகிவிட்டது இன்னும் கொடுக்கவில்லை. ஏதேதோ காரணங்கள் சொல்கிறார். இன்று தருவதாக சொன்னார். ஆனால் நாங்கள் நம்பவில்லை. எனவே புகாரளித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com