காஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது?  

காஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது?  
காஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது?  

1925 ஆம் ஆண்டு காஷ்மீரின் மன்னராக ஹரி சிங் பொறுப்பேற்றார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் பொது காஷ்மீரின் ஹரி சிங்தான் மன்னர் பொறுப்பில் இருந்தார். அப்போது காஷ்மீரில் இரண்டு பிரதான கட்சிகள் இருந்தன. ஒன்று; தேசிய மாநாட்டு கட்சி. இரண்டு; முஸ்லிம் மாநாட்டு கட்சி. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா இருந்தார். தேசிய மாநாட்டு கட்சிக்கு காஷ்மீர் பகுதியில் அதிக செல்வாக்கு இருந்தது. அதேபோல ஜம்மு பகுதியில் முஸ்லிம் மாநாட்டு கட்சிக்கு அதிக செல்வாக்கு இருந்தது. 

1947ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் பொது ஜம்மு-காஷ்மீரில் இருந்த இந்துக்கள் சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்கள் ஆகியோர் இந்தியாவில் இணையவேண்டும் என்று கருத்தில் இருந்தனர். அதேபோல மேற்கு ஜம்மு மற்றும் சில மாவட்டங்களிலுள்ள இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்ற கருத்தில் இருந்தனர். 

இந்தச் சூழலில் காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரி சிங் ஒரு இந்துவாக இருந்தார். ஆனால் அவரின் மக்கள் அதிக பேர் இஸ்லாமியர்களாக இருந்தனர். இந்நிலையில் இந்தியாவுடன் சேர்வதா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்ற கேள்வி எழுந்தது. எனவே மன்னர் ஹரி சிங் இந்த இரு நாடுகளுடனும் இணைய மாட்டோம் என்ற முடிவை எடுத்தார். 

இதனைத் தொடர்ந்து 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தானின் ஆதரவுடன் ஸ்ரீநகர் பகுதியில் ஆசாத் காஷ்மீர் படைகள் தாக்குதல் நடத்தினர். இந்தப் பிரச்னையிலிருந்து பாதுகாக்க ஹரி சிங் இந்தியாவிடம் ராணுவ உதவி கோரினார். அத்துடன் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தார். அப்போது இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் மன்னர் ஹரி சிங் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது இருவரும் 'Instrument of Acession' என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

இதன்படி காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைய ஒப்புக்கொண்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தொலைத் தொடர்பு ஆகிய விஷயங்களில் இந்திய அரசு முடிவு எடுக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதனையடுத்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற பிரச்னையை சரி செய்ய இந்திய பிரதமர் நேரு, ஐநா சபையிடம் முறையிட்டார். இதனைத் தொடர்ந்து ஐநா சபையின் தீர்மானத்தின்படி பாகிஸ்தான் படைகள் காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதேபோல காஷ்மீரிலிருந்து இந்திய படையும் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவிடம் இணையுமா அல்லது பாகிஸ்தானுடன் இணையுமா என்பது குறித்து அம்மாநில மக்களிடம் வாக்கெடுப்பு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த ஐநாவின் தீர்மானித்திற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளாததால் இந்த வாக்கெடுப்பு இன்று வரை நடைபெறவில்லை. 

1947ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 370 அமைக்கப்பட்டது. இந்தப் பிரிவு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்குகிறது. அத்துடன் 1952ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லா மற்றும் இந்திய பிரதமர் நேரு ஆகியோர் இடையே டெல்லி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை விரிவாக தெளிவு படுத்தியது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com