‘5-ஆம் தேதி வரை சிதம்பரத்திற்கு சிபிஐ காவல்’ - உச்சநீதிமன்றம்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் காவலை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று சிபிஐ கூறியபோதும், செப்டம்பர் 5-ஆம் தேதி வரை அவரை சிபிஐ காவலில் வைக்க உச்சநீதிமன்றம் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததற்கு எதிராகவும், சிபிஐ காவலுக்கு அனுப்பிய சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி ப.சிதம்பரத்திற்கு நேற்றுடன் சிபிஐ காவல் நிறைவடைய இருந்த நிலையில், வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரம் தரப்பு கோரிக்கையை ஏற்று அவரை 3 நாள்களுக்கு திகார் சிறையில் அடைக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யவும், மனு மீது உடனடியாக முடிவவெடுக்கவும் உத்தரவிடப்பட்டது. பின்னர் பிற்பகலில் நடந்த விசாரணையின்போது, சிபிஐ தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்ற உத்தரவு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி விடும் என்பதால், அதனை திரும்பப் பெறுமாறு கோரினார்.
பின்னர் ஒத்திவைக்கப்பட்ட வழக்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, இவ்வழக்கில் ப.சிதம்பரத்தை மேற்கொண்டு காவலில் எடுத்து விசாரிக்க விருப்பமில்லை என்றும், எனவே அவரை திகார் சிறைக்கு அனுப்ப உத்தரவிடுமாறும் சிபிஐ தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாளை மறுதினம் வரை அதாவது 5 ஆம் தேதி வரை சிதம்பரம் சிபிஐ காவலில் கட்டாயம் இருக்க வேண்டுமென ஆணையிட்டனர்.