அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் இழப்பு? - PF சேமிப்பிற்கான வட்டி குறையுமா?

அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் PF சேமிப்பிற்கான வட்டி குறையுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் இழப்பு? - PF சேமிப்பிற்கான வட்டி குறையுமா?

இந்தியாவில் உள்ள 27.73 கோடி ஊழியர்களின் பி.எப் சேமிப்பு பணத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நிர்வகித்து வருகிறது. அந்த தொகையில் ரூ.1.57 லட்சம் கோடி அளவுக்கு ஷேர் மார்க்கெட் (ETF ) வழியாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், நடப்பு நிதியாண்டில் ரூ.8,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது. அதானி நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருக்கும் LIC நிறுவனம்போல அக்குழும நிறுவனங்களான அதானி எண்டர்பிரைஸ், அதானி போர்ட் பங்குகளிலும் EPFO அமைப்பு கணிசமான பி.எப் பணத்தை முதலீடு செய்துள்ளது. இது, சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், PF சேமிப்பிற்கான வட்டி குறையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு பங்குச்சந்தையில் இறக்கத்தைக் கண்ட அதானி குழும பங்குகளில் முதலீட்டை தொடர தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எப்.ஓ) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, EPFO அமைப்பின் வருடாந்திர கூட்டம் இன்று (மார்ச் 27) மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இக்கூட்டத்தில் அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், இந்தியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய அமைப்பின் நடவடிக்கைகள், மக்களைப் பாதிக்கக் கூடுமென்பதால் இக்கூட்டத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக முடிவு எடுக்கும்வரை, முதலீட்டை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் EPFO அமைப்பு முதலீடு செய்துள்ள அதானி குழுமத்தின் 2 நிறுவனங்களின் பங்குகள் விலை இந்தாண்டில் 19% குறைந்துள்ளது. இதன் தாக்கமாக இபிஎஃப் சேமிப்பு தொகைக்கான வட்டி மேலும் குறைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது இபிஎஃப் சேமிப்பு தொகைக்கான வட்டி 8.1% ஆக உள்ளது.

இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவாகும். முன்னதாக வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில் பிஎஃப் வட்டியும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் வட்டி குறையுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. முன்னதாக, அதானி நிறுவன பங்குகளின் சரிவு காரணமாக அதில் முதலீடு செய்திருந்த LIC நிறுவனமும் பலத்த சேதத்தை சந்தித்ததாக செய்திகள் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com