டெல்லி பல்கலைக்கழக மாணவி கருத்து: பாஜக தலைவர்கள் கடும் விமர்சனம்
டெல்லியில் கார்கில் தியாகியின் மகளுக்கு எதிராக பாரதிய ஜனதா தலைவர்கள் கடும் விமர்சனங்களை தொடுத்து வருகின்றனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி குர்மெஹர் கர், கார்கில் போரில் தனது தந்தை உயிரிழந்தது குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் தனது தந்தையை கொல்லவில்லை என்றும் போர் தான் கொன்றது எனவும் அவர் கூறியிருந்தார். அதேபோல், தேசியவாதம் என்கிற பெயரில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் வன்முறைகளை ஏற்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜூஜூ, மாணவியின் மனதை மாசுபடுத்தியவர்கள் யார் என கூறியுள்ளார். பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா, நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் அந்த மாணவியை ஒப்பிட்டு விமர்சித்துள்ளார். அதேவேளையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மாணவிக்கு ஆதரவு அளித்துள்ளனர். கொலை மற்றும் வன்கொடுமை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக அளித்த புகாரின் பேரில் மாணவிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.