வரித்தொகை திரும்பத் தருவதாக குறுஞ்செய்தி : சைபர்கிரைம் எச்சரிக்கை
முன்கூட்டி செலுத்திய வருமான வரியை திரும்ப அளிக்க வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டு வரும் குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இணைய தள குற்றத் தடுப்பு அமைப்புகள் பொதுமக்களை எச்சரித்துள்ளன.
மாதச் சம்பளதாரர்களுக்கு அலுவலகம் மூலமாக வரிப்பிடித்தம் செய்து வருமான வரித் துறைக்கு செலுத்தப்படுகிறது. அதேபோல மற்ற பிரிவினர் தங்கள் வருமானத்துக்கேற்ப முன்கூட்டி வருமான வரி செலுத்துவது வழக்கம். நிதியாண்டு முடிவில் வருமானக் கணக்கை தாக்கல் செய்யும்போது, பலருக்கு முன்கூட்டி செலுத்திய அல்லது பிடித்தம் செய்து செலுத்தப்பட்ட வரித்தொகையில் குறிப்பிட்ட அளவு திரும்பக் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த தொகையைப் பெற வங்கிக் கணக்கு விவரங்களைத் தருமாறு பலருக்கு குறுஞ்செய்தியை சிலர் மோசடியாக அனுப்பி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதன்மூலம், ஆதார் உள்ளிட்ட சுயவிவரத் தகவல்களைத் திருடி மோசடியில் ஈடுபட நடக்கும் முயற்சி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இணைய தள குற்றத் தடுப்பு அமைப்புகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. வருமான வரித் துறை பெயரில் வரும் இதுபோன்ற குறுஞ்செய்திகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், சுயவிவரத் தகவல்களை அளிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வரித் தொகையை திரும்ப அளிக்க வருமான வரித் துறை சார்பில் எந்த குறுஞ்செய்தியும் அனுப்பாமல், நேரடியாக அவரவர் வருமான வரித் தாக்கல் படிவத்தில் அளித்துள்ள வங்கிக் கணக்கில் வருமான வரித்துறை வரவு வைப்பது வழக்கம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.