நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினம்
சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் சூழலில் தமிழகம், புதுச்சேரியில் பிரபலங்கள், மாணவர்கள் என அனைவரும் யோகாசனம் செய்து அசத்தினர்.
உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, மக்கள் அன்றாடம் யோகா செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
யோகா என்பது அனைவருக்குமானது என குறிப்பிட்ட மோடி நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு யோகா அவசியம் என தெரிவித்தார். மேலும் யோகாவின் பயன் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என கூறினார். பின்னர் சுமார் 40 ஆயிரம் பேருடன் இணைந்து பல்வேறு ஆசனங்களை பிரதமர் மோடி செய்தார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி ராணுவ வீரர்கள் குதிரை மீது அமர்ந்து யோகா செய்தனர். உத்தரபிரதேச மாநில சஹாரன்பூரில் ராணுவ மேஜர் ஆஷிஷ் மற்றும் கமாண்டோ மங்கல் சிங் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் குதிரை மீது அமர்ந்து யோகாசனங்களைச் செய்தனர். EQUESTRAIN எனப்படும் இந்த யோகா, குதிரை சவாரி செய்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
இந்திய - திபெத் எல்லையோரத்தில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் ஆற்றில் நின்று யோகாசனம் செய்தனர். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் லோஹித்பூர் அருகே இந்திய -திபெத் எல்லையோரமான டெஜூ பகுதியில் பாயும் டயாகுரு ஆற்றில், இன்று அதிகாலை ராணுவ வீரர்கள் யோகாசனம் செய்தனர்.
எல்லை பாதுகாப்பு படையின் ஒன்பதாவது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த ஆண், பெண் வீரர்கள், ஆற்றில் இடுப்பளவிற்கு நீர் செல்லும் பகுதியில் நின்று யோகாசனத்தில் ஈடுபட்டனர். மேலும் ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து மோப்ப நாய்களும் யோகாசனங்களை செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதனைதொடர்ந்து சென்னை நந்தனத்தில், தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் யோகாசன செய்தனர். அப்போது தமிழக பள்ளிகளில் வாரத்துக்கு ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க திட்டம் உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும் கோவை ஈஷா மையத்திலும், மதுரை ரேஸ் கோர்ஸ் சாலையிலும் சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும் உற்சாகமாக யோகா செய்தனர்.