சர்வதேச புலிகள் தினத்தை ஒட்டி, பொதுமக்களுக்கு புலிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் சார்பில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் சார்பில் வாரம்தோறும் உள்ளூர் மக்களை குழுக்களாக வனத்திற்குள் அழைத்துச் சென்று தங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இயற்கையோடு புலிகளை காப்பதன் முக்கியத்துவம் குறித்து உணர வைக்கும் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தவிர புலிகள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய இரு மாவட்ட வன எல்லைகளுக்குட்பட்ட 925 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம். கடந்த 2014ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமாராக 40 புலிகள் இந்த காப்பகத்தில் உள்ளதென கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்தவும், புலிகளை பாதுகாக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகளை காப்பதால் காடு செழிக்கும் என்பதையும் வனம் செழித்தால் மனித வாழ்வு சிறக்கும் என்பதை மக்களுக்கு தத்ரூபமாக உணரச்செய்யும் வகையில் புலிகள் உள்ளூர் மக்கள் இயற்கை சூழ்நிலையில் கண்டு ரசிக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

