நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..?
நாடாளுமன்றத்தில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் பட்ஜெட்டில் தங்கள் எதிர்பார்ப்புகள் குறித்து பல்வேறு தொழில் அமைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தெரிவித்த கருத்துகளை தெரிந்து கொள்வோம்.
தனி நபர்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பை இரட்டிப்பாக்கி 5 லட்சம் ரூபாய் ஆக்க வேண்டும் என சிஐஐ எனப்படும் இந்திய தொழிற் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதே போல் 80 சி பிரிவின் கீழ் ஒன்றரை லட்சம் ரூபாய் வரையிலான சேமிப்புகளுக்கு தரப்படும் வரிச்சலுகையை இரண்டரை லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என சிஐஐ கூறியுள்ளது.
விவசாயத் துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என PHD chamber என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இதே போல வருமான வரி விகிதங்களை சீரமைப்பதுடன் தொழில் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை 25% ஆக குறைக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்து. இறக்குமதி செய்யப்படும் டிவி, ஏசி, வாஷிங் மெஷின் போன்ற வீட்டுயோக சாதனங்களுக்கு சுங்க வரியை அதிகரிக்க வேண்டுமென இந்திய நுகர்வோர் சாதன உற்பத்தியாளர் சங்கம் கோரியுள்ளது. வணிகர்களுக்கு குறைந்த வட்டியில் தொழிற் கடன் வழங்குவதுடன் ஜிஎஸ்டியில் பதிவு செய்த வணிகர்களுக்கு 10 லட்சம் ரூபாய் விபத்து காப்பீட்டு வசதி உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி நடைமுறையில் 18% அளவை கைவிடுவதுடன் அதில் உள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை 12% பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது. வாகனங்களுக்கு தற்போது 28% வரி விதிக்கப்படுவதாகவும் அதை குறைக்கவேண்டும் என்றும் மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறு காரணங்களால் நாடுமுழுவதும் ஏராளமான கட்டுமான திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும் இவற்றுக்கு புத்துயிர் தர 2 ஆயிரம் கோடி ரூபாயில் சிறப்பு நிதி உருவாக்க வேண்டும் என ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் சங்கமான நேரட்கோ தெரிவித்துள்ளது.

