\
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்pt web

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர்.. ஓர் சிறப்புப் பார்வை

இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
Published on: 

இந்திய நாடாளுமன்றம் பொதுவாக ஆண்டுக்கு மூன்று முறை கூடுகிறது. ஜனவரி இறுதியில் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர், ஜூலை மாத மழைக்காலக் கூட்டத்தொடர், நவம்பர் மாத குளிர்காலக் கூட்டத்தொடர் என மூன்று கூட்டத்தொடர்கள் வழக்கத்தில் உள்ளன. ஆனால், இவை அனைத்தும் அரசியல் சாசனத்தில் கட்டாயமாக நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணை அல்ல. முக்கியமான அரசியல், சட்ட மற்றும் தேசிய நிகழ்வுகளுக்காக வழக்கமான அட்டவணையைத் தாண்டி கூட்டப்படுவதுதான் சிறப்புக் கூட்டத்தொடர்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்திய அரசியல் சாசனத்தில் 'சிறப்புக் கூட்டத்தொடர்' என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரத்தை வழங்குவது அரசியல் சாசனத்தின் 85ஆவது பிரிவு. இதன்படி, குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டலாம். ஆனால், ஒரு கூட்டத்தொடரின் கடைசி அமர்வுக்கும் அடுத்த கூட்டத்தொடரின் முதல் அமர்வுக்கும் இடையே ஆறு மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்Pt web

இந்த அதிகாரத்தை குடியரசுத் தலைவர் அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுத்துகிறார். பொதுவாக, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தொடருக்கான தேதிகளை முடிவு செய்து பரிந்துரைக்கிறது. மேலும், 352ஆவது பிரிவில் தேசிய அவசரநிலை தொடர்பாக ஒரு முக்கியமான சிறப்பு அமர்வு குறிப்பிடப்பட்டுள்ளது. அவசரநிலைப் பிரகடனத்தை எதிர்த்து மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒருவர் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தால், 14 நாட்களுக்குள் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டு அதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்.

இதற்கு முன்பு, 2017இல் ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்த நள்ளிரவில் நடந்த சிறப்புக் கூட்டம், 2023இல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதும் சிறப்புக் கூட்டத்தொடரின் முக்கிய வரலாற்றுத் தருணங்களாக அமைந்தன. ஆக, சிறப்புக் கூட்டத்தொடர் என்பது தனியான அரசியல் சாசன நடைமுறை அல்ல; அரசின் முக்கியத் தேவைகளுக்காக அரசியல் சாசனத்தின் 85ஆவது பிரிவைப் பயன்படுத்தி கூட்டப்படும் அமர்வாகும்.