குடிபோதையில் யானைக்கு முத்தமிட முயன்ற இளைஞர் - மருத்துவமனையில் அனுமதி
குடிபோதையில் யானைக்கு முத்தமிட முயன்ற இளைஞர், யானையால் தாக்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில், மலூர் அருகிலுள்ள தோத்தி என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தமிழ்நாடு கர்நாடக எல்லையிலுள்ள தோத்தி கிராமத்தில் கடந்த சில வாரங்களாகவே யானைகள் ஊருக்குள் நுழைந்து பயிர்களை உண்டு வருகின்றன. வெள்ளரி, வாழை, மாங்காய் தோப்புகளை சுற்றித் திரிகின்றன. இதனையடுத்து, யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், காட்டில் இருந்த யானைகள் மீண்டும் கிராமங்களுக்குள் புகுந்துள்ளன. இதை கண்ட தோத்தி கிராம மக்கள் தூரத்தில் நின்று கொண்டு யானைகளோடு புகைபடம் எடுத்துள்ளனர். அதில் சில நபர்கள் யானைக்கு மிக அருகில் சென்று செல்பி எடுக்கவும் முயற்சி செய்துள்ளனர்.
அப்போது, ராஜூ என்ற இளைஞர் குடிபோதையில் யானைக்கு அருகில் செல்ல முயற்சித்துள்ளார். மக்கள் கூட்டத்தால் மிரண்ட யானை அவர்களை தாக்க முயற்சித்துள்ளது. எல்லா மக்களும் யானைகளிடம் இருந்து தூராமாக ஓடினார். ஆனால் அந்த இளைஞன் மட்டும், குடிபோதியிலேயே யானைக்கு முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார். ஆத்திரமடைந்த யானை ராஜூவை தாக்கியுள்ளது.
பின்னர், அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு முன்னால் ராஜு தனது நண்பர்களிடம், ‘இப்போது பாருங்கள். நான் எப்படி சினிமா பாணியில் யானைக்கு முத்தமிடுகிறேன்’ என்று கூறியிருக்கிறார். கன்னடப் படம் ஒன்றில் யானைக்கு ஹீரோ முத்தமிடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அதனைப் பார்த்துவிட்டு திரைப்பட பாணியில் யானைக்கு முத்தமிட முயன்று, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அந்த இளைஞர்.