வெற்றி சிலருக்கு ஆசை மட்டுமல்ல; கட்டாயம் - மாரத்தான் வீராங்கனையின் நெகிழ்ச்சி கதை!

வெற்றி சிலருக்கு ஆசை மட்டுமல்ல; கட்டாயம் - மாரத்தான் வீராங்கனையின் நெகிழ்ச்சி கதை!
வெற்றி சிலருக்கு ஆசை மட்டுமல்ல; கட்டாயம் - மாரத்தான் வீராங்கனையின் நெகிழ்ச்சி கதை!

அக்காவின் திருமண செலவுக்காக மாரத்தானில் ஓடி வெற்றிப்பெற்ற வீராங்கனைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

வாழ்க்கை நம்மை கடுமையான சிக்கலுக்குள் தள்ளும்போது தான் நாம் இன்னும் பலமடைகிறோம் என்று சொல்வார்கள். அதற்கு ஏற்ப குடும்ப வறுமையின் காரணமாக புனேவில் இருந்து ஒரு வீராங்கனை இந்த உலகுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். தன் அக்காவின் திருமண செலவுக்காக மாரத்தானில் ஓடி வெற்றிப்பெற்றுள்ளார் வீராங்கனை பூனம் சோனேன். 

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் 19 வயதான பூனம். ஏழை விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு திருமண வயதில் அக்கா ஒருவர் இருந்துள்ளார். தன்னுடைய சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தை ஓட்டவே  முடியாத நிலையில் மூத்த மகளின் திருமண செலவுக்காக பணம் இல்லாமல் தவித்துள்ளார் பூனமின் தந்தை. குடும்ப சூழ்நிலையைக் கண்டு வருந்திய பூனம், தன் அக்காவின் திருமண செலவுக்கான பணம் தயார் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்கு அவர் கையில் எடுத்த திட்டம்தான் 'மாரத்தான்'.

சிறு வயதில் இருந்தே ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் கொண்ட பூனம், பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். வறுமை பிடியிலும் தன் ஓட்டப்பந்தயத்தை விட்டுக்கொடுக்காத அவர் அவ்வப்போது தன்னுடைய பந்தய பசிக்கு தீனி போட்டே வந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் 3,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றதே அதற்கான சாட்சி. இந்நிலையில் தன்னுடைய அக்காவின் திருமண செலவுக்காக  புனே மாராத்தான் போட்டியில்  பங்கேற்க திட்டமிட்ட பூனம், அதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பூனம் வறுமையில் இருப்பதை உணர்ந்த அவரது பயிற்சியாளர் விஜேந்திரசிங், தொண்டு நிறுவனங்களுடன் உதவியுடன் அவருக்கு பயிற்சி உதவிகளை வழங்கியுள்ளார். வெற்றிப் பெற வேண்டுமென்ற வெறி, கடுமையான பயிற்சி மூலம் புனே மாராத்தானில் ஓடி வெற்றிபெற்றுள்ளார் பூனம். மாராத்தானில் முதல் பரிசை வென்று, தான் பெற்ற ரூ.1.25 லட்சத்தை தன்னுடைய தந்தையின் கையில் ஒப்படைத்துள்ளார் வீராங்கனை பூனம். 

பூனத்தின் உதவியால் அவரது அக்காவின் திருமண வேலைகள் நடந்தாலும்  தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான வீரர்களுக்கான தேர்வில் பூனம் கலந்துகொண்டதால் தன் அக்காவின் திருமணத்தில் பங்குபெறமுடியவில்லை. ஆனாலும் பூனத்துக்கும் அவரது சகோதரிக்கும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வெற்றிப் பெற வேண்டும் என்ற ஆசையோடு களத்தில் நிற்பதும், வெற்றி பெற வேண்டும் வெறியோடு களத்தில் நிற்பதும் வெவ்வேறானவை. பூனம் வெறியோடு நின்றவர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com