இன்று கடைசி பயணத்தை தொடங்கும் 'ஐ.என்.எஸ். விராட்' கப்பல்!
இந்திய கடற்படையின் ஹீரோவாக வலம் வந்த ஐ.என்.எஸ். விராட் கப்பல் இன்று தனது கடைசி பயணத்தை தொடங்குகிறது!
ஐ.என்.எஸ் விராட். இந்திய கடற்படையின் அதிமுக்கிய அங்கமாக திகழ்ந்த விமானந்தாங்கி கப்பல்.
1987-ஆம் ஆண்டிலிருந்து 30 ஆண்டுகள் கடற்படையின் முன்னணி கப்பலாக திகழ்ந்தது ஐஎன்எஸ் விராட். பிரிட்டிஷ் ராயல் கடற்படை பயன்படுத்திய இக்கப்பலை 1986-ஆம் ஆண்டு வாங்கி அதிநவீன வசதிகளுடன் புதுப்பித்தது இந்திய கடற்படை.
சுமார் 29 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த பிரமாண்ட கப்பலில் 26 விமானங்களை நிறுத்தும் வசதியுடன் நடமாடும் விமான தளமாகவே வலம் வந்தது ஐஎன்எஸ் விராட்.
பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான பதற்ற காலங்களில் இந்திய படைகளின் முதுகெலும்பாக திகழ்ந்தது இக்கப்பல். இந்திய அமைதி காக்கும் படை இலங்கை சென்றபோதும் இந்தக் கப்பலின் சேவை மகத்தானது. நீண்ட சேவைக்கு பின் கடந்த 2017ஆம் ஆண்டு கடல் பணியிலிருந்து இந்த கப்பலுக்கு ஓய்வளிக்கப்பட்டது.
மும்பையிலிருந்து தனது இறுதிப்பயணத்தை தொடங்கும் இக்கப்பல் குஜராத்திலுள்ள ஆலங் துறைமுகத்தை சென்றடைய உள்ளது. அங்கு இதன் இரும்பாலான பாகங்கள் பிரித்தெடுக்கப்பட்டு விற்கப்பட உள்ளது.
இந்த கப்பலை உடைத்து இதிலுள்ள பாகங்களை பிரித்து எடுப்பதற்கு ஆகும் செலவு மட்டும் 38 கோடி ரூபாய் என்பது இதன் பிரமாண்டத்தை உணர்த்துவதாக உள்ளது.