கொசுவின் விந்தணுவில் கலந்த விஷம்.. விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களின் பரவலை கட்டுப்படுத்தும் ஒரு புது முயற்சியாக புதுமையான ஒரு ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
சமீப காலமாக புதிது புதிதாக தொற்றுகள் உருவாகி மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. கொரோனா, ஸ்கிரப் டைபஸ் என்று தொடங்கி சமீபத்தில் கூடா சீனாவிலிருந்து பரவிய ஹெச்எம்பி வைரஸ் என பலவற்றை கூட செய்திகளில் பார்த்திருப்போம்..
இதற்கான மருந்துகளை கண்டறிவதற்கும் கடுமையான ஆராய்ச்சிகளும் மற்றொரு புறம் சென்றுகொண்டுதான் இருக்கிறது. இந்தவகையில், நோயை உண்டாக்கும் கொசுக்கள் மூலமாகவே நோய்க்கான மருந்தை கண்டறியும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.
நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. விஞ்ஞானிகள், மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட ஆண் கொசுக்களை உருவாக்கியுள்ளனர். இந்த ஆண் கொசுக்களின் விந்தணு நச்சுத்தன்மை கொண்டதாக இருக்குமாம்.
இவை கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும்போது விஷம் இருக்கும் விந்து பெண் கொசுக்களின் உடலுக்கு சென்று விடுகிறது. இதனால், இனச்சேர்க்கைப்பிறகு அந்த குறிப்பிட்ட பெண் கொசு உயிரிழந்து விடுமாம். பெண் கொசுக்கள் மட்டும் உயிரிழப்பதற்கான காரணம்? ஆண் கொசுக்களை பொறுத்தவை தாவர சாறுகள், தேன் போன்றவற்றை அவை உண்கின்றன. இதன் மூலம் அவற்றின் உடலுக்கு தேவையான சர்க்கரையையும் ஆற்றலையும் பெறுகின்றன.
ஆனால், பெண் கொசுக்களுக்கு அவை இடும் முட்டைகளை வளர்க்க புரதம் தேவைப்படுகிறது. இதனால், மனித ரத்தத்தை அவை உறிஞ்சி குடிக்கின்றன. இப்படி, பெண் கொசுக்கள் கடிப்பதால், மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றது. இதன் காரணமாகவே பெண் கொசுக்கள் கொல்லப்படுகின்றன.
சோதனையின் முதற்கட்டமாக fruit flies மீது இதைச் சோதனை முறையில் பயன்படுத்தியுள்ளனர். இதன் முடிவுகளில் பெண் fruit fliesகளின் ஆயுட்காலம் குறைவதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதன் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் அடுத்தகட்ட முயற்சியைத் தொடங்கவுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக்வாரி பல்கலைக்கழக ஆய்வாளர் சாம் பீச் கூறுகையில், "கெமிக்கல் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் போது கொசுக்கள் மட்டுமின்றி, நமக்குப் பயனுள்ள உயிரினங்களுக்கும் கூட செத்துவிடும். ஆனால், இந்த முறையில் பயனுள்ள உயிரினங்களுக்கு எதுவும் ஆகாது. கொசுக்களை மட்டும் குறிவைத்து காலி செய்துவிடலாம். இந்த புதுமையான ஒரு தீர்வு.. பூச்சிகளை எப்படி நிர்வகிக்கிறோம் என்பதையே இது மொத்தமாக மாற்றி அமைத்துள்ளது. இது ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கவும் நமக்கு உதவுகிறது" என்றார்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் ஒருபுறம் நல்லவரவேற்பை பெற்றாலும், மறுபுறம் இப்படி செய்வதால் உயிரின சங்கிலியை இது பாதிக்காத என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.