லாப நோக்கத்திற்காக ஊழியர்களுக்கு சட்டவிரோத விசா! Infosys-க்கு ரூ.238 கோடி அபராதம்.. USA அதிரடி!
செய்தியாளர் - ந.பாலவெற்றிவேல்
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி கடந்த மாதம் ஊழியர்கள் வாரத்திற்கு ஆறு நாட்கள் அல்லது 70 மணி நேரத்திற்கு மேல் பணியாற்ற வேண்டும் என கூறியது கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், லாப நோக்கத்திற்காக தங்கள் ஊழியர்களுக்கு சட்டவிரோதமான விசா வழங்கியது மீண்டும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியது உறுதி படுத்த பட்டதை அடுத்து 238 கோடி அபராதமாக செலுத்த ஒப்பு கொண்டுள்ளது. இது ஒரு இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்காவில் இதுவரை விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இன்போசிஸ் பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம். 22 நாடுகளில் கிளை அலுவலகங்களை கொண்டுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் மொத்தமாக 1.4 லட்சம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் இந்தியா உட்பட வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றும் இன்போசிஸ் ஊழியர்களுக்கு H-1B தொழில்விசா பெற வேண்டிய இடத்தில், B-1 பார்வையாளர் விசாக்களை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து அமெரிக்க குடிவரவு அமைப்பான ICE முழுமையான விசாரணை நடத்தியது. அதில்
இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு H-1B தொழில்விசா பெற வேண்டிய இடத்தில், B-1 பார்வையாளர் விசாக்களை தவறாகப் பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம், ஊதியம் மற்றும் தொழிலாளர் நல திட்டங்கள் ஆகியவற்றின் செலவுகளைத் தவிர்க்க முயன்றதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
H-1B விசா பயன்படுத்தினால் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம், குடிவரவு போன்றவற்றில் அமெரிக்க சட்ட விதிகளை முறைப்படி பின்பற்ற வேண்டும். ஆனால் B-1 பார்வையாளர் விசாக்களை பயன்படுத்தி ஊழியர்களை பணியாற்ற வைத்த நிலையில் தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்க குடிவரவு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.