இந்தூர் | ’சாந்தாரா' சடங்கு.. உயிரிழந்த 3 வயது குழந்தை!
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் பியூஷ். இவரது மனைவி வர்ஷா ஜெயின். இருவரும் ஐடி நிபுணர்கள். இவர்களுடைய ஒரே மகள் வியானா. 3 வயதான இந்தக் குழந்தைக்கு மூளையில் கட்டி இருப்பது கடந்தாண்டு தெரிய வந்தது. இதனால், அக்குழந்தையின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மருத்துவச் சிகிச்சையிலும் முன்னேற்றம் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஜெயின் மத நம்பிக்கையின் மீது அக்குடும்பத்தினர் திரும்பியுள்ளனர். கடந்த மார்ச் 21 அன்று, இந்தூரில் உள்ள ஆன்மிகத் தலைவர் ராஜேஷ் முனி மகாராஜை குழந்தையின் குடும்பம் சந்தித்தது. அப்போது இக்குழந்தைக்கு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் 'சாந்தாரா' வழங்கப்பட்டது. இது மரணத்திற்கு வழிவகுக்கும் ஒரு மத துறவு சடங்காகும். சாந்தாராவினால் தங்களது குழந்தை இறந்துவிட்டதாக தாயார் வர்ஷா ஜெயின் தெரிவித்தார். மூன்று வயது குழந்தையின் உடல்நிலை ஏற்கெனவே மோசமாக இருந்ததால் விரைவிலேயே அக்குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய அக்குழந்தையின் தந்தை பியூஷ் ஜெயின், "எங்கள் மகளுக்கு 'சாந்தாரா'வை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் இங்கு வரவில்லை. ஆனால் குருஜி அவளுடைய நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறி அதை பரிந்துரைத்தார். குடும்பத்தில் உள்ள அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்" தெரிவித்தார்.
இதன்மூலம் மிகக் குறைந்த வயதில் 'சாந்தாரா' சபதம் எடுத்த நபர் என்று உலக சாதனை புத்தகத்தில் இச்சம்பவம் பதிவு செய்யப்பட்ட பின்னரே வெளியுலகத்திற்கு இது தெரியவந்துள்ளது. ஆனால், இக்குழந்தையின் மரணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. நெட்டிசன்ளும், மூடநம்பிக்கையால் ஒரு குழந்தையை கொன்றுவிட்டார்கள் என்று அக்குடும்பத்தையும் இந்த ஜெயின் மத சடங்கையும் விமர்சித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரித்தேஷ் அகர்வால், "ஒரு மைனரின் வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய முடிவு பெற்றோரிடம்கூட இல்லை. இது ஒரு கடுமையான சட்ட மற்றும் அரசியலமைப்பு கேள்வியை எழுப்புகிறது. சட்டப்பூர்வமாகவோ அல்லது உணர்ச்சிரீதியாகவோ மரணத்தை புரிந்துகொள்ள முடியாத ஒரு மைனரின் விஷயத்தில் 'சாந்தாரா'வை நிர்வகிக்க முடியுமா? பிரிவு 25 மதச் சுதந்திரத்தை வழங்குகிறது. ஆனால், சட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. மதப் பழக்கவழக்கங்கள்கூட சட்டப்பூர்வ வாழ்க்கை உரிமையை மீற முடியாது” என்றார்.
'சாந்தாரா' அல்லது ’சல்லேகானா’ என்பது பல நூற்றாண்டுகள் பழைமையான சமண மரபைச் சேர்ந்த சடங்காகும். இது அதன் ஆதரவாளர்களால் ஒரு புனிதமான வெளியேற்றமாகக் கருதப்படுகிறது. மரணம் நெருங்கி வரும்போது மற்றும் உடல் ஆன்மிகத் தேடலை ஆதரிக்கத் தவறும்போது உணர்வுபூர்வமாக எடுக்கப்படும் உச்ச துறவுச் செயல் ஆகும். 2015 ஆகஸ்டில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் 'சாந்தாரா' சடங்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306இன் கீழ் தற்கொலைக்கு சமம் என்று கூறி இதனை சட்டவிரோதமாக அறிவித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து, ஜெயின் சமூகத்தினர் நாடு தழுவிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் உடனடியாக அடுத்த மாதம் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.