
செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் சிலருக்கு அலாதி பிரியம் உண்டு. அவர்களின் வீட்டில் ஒருவரைப்போல ராஜ வாழ்க்கை வாழ்ந்து வரும் செல்லப்பிராணிகளுக்கு சிலர் புது ஆடை வாங்கி, வருடா வருடம் பிறந்த நாளும் கொண்டாடி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் செல்லப்பிராணிகளின் தொந்தரவு தாங்கமுடியாமல் ஒருவர், துப்பாக்கியால் சுட்டதில் இருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கிருஷ்ணாபாக் காலணியில் வசித்து வருபவர் ராஜ்பால் ரஜாவத். இவர் அங்கிருக்கும் வங்கி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது காலணியில் இவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு பக்கத்து வீடுகளில் நாய் வளர்த்து வருவது, இவருக்கு தொந்தரவாக இருந்ததால், ராஜ்பால் அடிக்கடி அண்டை வீட்டார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஒருகட்டத்தில், பக்கத்து வீடுகளில் வளர்க்கப்படும் நாய் அவருக்குத் மிகவும் தொந்தரவாகத் தெரிய, பொறுமை இழந்த அவர், தனது கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வீட்டின் மாடிக்குச் சென்று, துப்பாக்கியால் அண்டை வீட்டார்களை மிரட்டும் பொருட்டு, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் அதே துப்பாக்கியால் கீழே இருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளார். இதில் எட்டுபேர் அவரது துப்பாக்கி குண்டில் காயமடைந்துள்ளனர் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ராஜ்பால் ரஜாவத் சுட்டதில் படுகாயம் அடைந்த எட்டு பேரில் ராகுல், மற்றும் விமல் என்பவர்கள் இறந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயம் அடைந்த மற்றவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கஜ்ரானா காவல்துறை ராஜ்பால் ரஜாவத்தை கைதுசெய்து, அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.