மியானமர் ஊடுருவல்: மணிப்பூர் எல்லையில் வேலி: எதிர்ப்பு தெரிவிக்கும் குக்கி இன மக்கள்!

மணிப்பூர் எல்லைப் பகுதியில் வேலி அமைப்பதற்கு குக்கி மற்றும் நாகா இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் எல்லை
மணிப்பூர் எல்லைட்விட்டர்

மியான்மரில் நீடிக்கும் பதற்றம்: இந்தியா எச்சரிக்கை

கடந்த 2021ஆம் ஆண்டு மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அந்த நாட்டு ராணுவம் கவிழ்த்து, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அப்போது முதல் இந்தியாவை ஒட்டிய மியான்மர் எல்லைப் பகுதிகளில் அந்த நாட்டு ராணுவத்துக்கும், ஆயுதம் தாங்கிய போராளிக் குழுக்களுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

இரண்டு தரப்புகளுக்கும் இடையேயான மோதல் கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் முதல் தீவிரமடைந்து வந்ததைத் தொடர்ந்து மியான்மரின் முக்கிய நகரங்கள் மற்றும் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் மியான்மரில் அனைத்து வன்முறைகளையும் நிறுத்திவிட்டு அனைவரையும் உள்ளடக்கிய கூட்டாட்சி ஜனநாயகத்துக்கு திரும்பும்படி இந்தியா அழைப்புவிடுத்தது. மேலும், ‘பாதுகாப்புச் சூழல் மிகவும் மோசமடைந்து வருவதால் மியான்மரின் ரக்கைன் மாநிலத்துக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்’ எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வேலி வைக்க இந்திய அரசு முடிவு: அமித்ஷா பதிவு

இந்த நிலையில், மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதியில் இருந்து ஊடுருவலைத் தடுக்கும் வகையில், அந்நாட்டினை ஒட்டிய இந்திய எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ‘இதில் ஏற்கெனவே மணிப்பூர் மாநிலத்தின் எல்லையை ஒட்டி மோரே பகுதியில் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இந்தியா - மியான்மர் எல்லையை ஒட்டி இரு பகுதிகளிலும் 16 கிலோமீட்டர் வரை எந்த ஆவணமும் இன்றி சுதந்திரமாகச் சென்றுவர அனுமதிக்கும் தற்போதைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனக் கருதப்படுகிறது.

மணிப்பூர் எல்லை
மியான்மர் ஊடுருவல்: எல்லைப் பகுதி முழுவதும் வேலி அமைக்க முடிவு.. அமித் ஷா உறுதி!

வேலி வைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் குக்கி இன மக்கள்

இந்தச் சூழலில், மணிப்பூர் மாநிலத்தை ஒட்டிய மியான்மர் எல்லையில் 10 கி.மீ. தூரத்துக்கு ஏற்கெனவே வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையாக வேலி அமைக்கும் மத்திய அரசின் முடிவை மணிப்பூரின் மெய்தி இனக் குழுவினர் வரவேற்றுள்ளனர். எல்லையில் வேலி அமைக்க வேண்டும் என்பது மெய்தி இனக் குழுவினரின் நீண்டகால கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், மணிப்பூரில் உள்ள குக்கி, மிசோ மற்றும் நாகா இனக் குழுவினர் எல்லையில் வேலி அமைக்கும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள், ’இந்த திட்டம், பல தசாப்தங்களாக எல்லைப் பகுதியில் உள்ள மக்களிடையே நிலவும் சமநிலையைச் சீர்குலைத்து, அண்டை நாடுகளுடன் பதற்றத்தைத் தூண்டும். மேலும் இது, தங்களது உரிமைகளைப் பறிக்கும் செயல்’ என்கின்றனர்.

எல்லையில் வேலி வைக்கக் காரணம் என்ன?

அதேநேரத்தில் இத்திட்டத்தை வரவேற்றுள்ள அருணாச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டு, ’இந்த நடவடிக்கை எல்லைக்கு அப்பால் இருந்து தீயசக்திகளின் நடமாட்டத்தை தடுக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் கடந்தாண்டு இரு குழுவினரிடையே கலவரம் வெடித்தது. அது இன்றும் அவ்வபோது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ‘இந்தக்ல் கலவரத்திற்கு மியான்மரைச் சேர்ந்த சிலர் ஊடுருவியதும் மியான்மரில் இருந்து சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்த போதைப்பொருள் வியாபாரிகளால் வன்முறை தூண்டப்பட்டதுமே காரணம்’ என மணிப்பூர் அரசு குற்றம்சாட்டியிருந்தது. இதன் காரணமாகவே இந்திய - மியான்மர் எல்லையில் வேலி அமைக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com