பயணியை தாக்கும் இண்டிகோ விமான ஊழியர்களின் வைரல் வீடியோ
இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் இருவர் பயணி ஒருவரை தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெற்ற இச்சம்பவம் பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ராஜீவ் கத்யால் என்ற பயணியை இண்டிகோ விமான நிறுவன பேருந்தில் ஏற்ற ஊழியர்கள் மறுத்ததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட மோதலில், பயணி ராஜீவ் கத்யாலை கீழே தள்ளிய இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள், அவரது குரல்வளையை மூர்க்கத்தனமாக நெறித்தனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஊழியர்கள் இருவரை பணியை விட்டு நீக்கிவிட்டதாகவும், இச்சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் இண்டிகோ விமான நிறுவனத் தலைவர் ஆதித்யா கோஷ் தெரிவித்துள்ளார்.