பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியை தரக்குறைவாக பேசியவருக்கு விமானத்தில் பறக்க தடை
விமானத்தில் பயணித்த தனியார் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை தரக்குறைவாக பேசி விமர்சித்த, நகைச்சுவை பேச்சாளர் குணால் காம்ரா 6 மாதங்களுக்கு விமானத்தில் பயணிக்க, இண்டிகோ விமான நிறுவனம் தடை விதித்துள்ளது.
பத்திரிகையாளரான அர்னாப் கோஸ்வாமி மும்பையில் இருந்து லக்னோ செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே வந்த குணால் காம்ரா, தகாத வார்த்தைகளில் தொடர்ந்து தீட்டித் தீர்த்தார். எனினும் அதற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் அர்னாப் கோஸ்வாமி அமைதியாக இருந்தார். இந்த சம்பவத்தை காம்ரா செல்போனில் படம்பிடித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்தப் பதிவை கண்ட பலர் காம்ராவுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்திருந்த நிலையில், சக பயணியிடம் மோசமான முறையில் நடந்து கொண்டதற்காக 6 மாதங்கள் விமானத்தில் பறக்க காம்ராவுக்கு இண்டிகோ நிறுவனம் தடை விதித்தது. இதேபோல் மற்ற விமான நிறுவனங்களும் காம்ராவுக்கு தடை விதிக்க வேண்டும் என விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரியும் கேட்டுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனமும் தமது விமானத்தில் காம்ரா பறப்பதற்கு தடை விதித்துள்ளது.
இந்நடவடிக்கைக்கு ட்விட்டரில் பதில் அளித்திருக்கும் காம்ரா, இண்டிகோ நிறுவனம் விதித்துள்ள தடை நியாயமானதுதான் என்றும், ஆனால் பிரதமர் ஏர் இந்தியா நிறுவனத்தை நிரந்தரமாக முடக்க முடிவெடுத்திருப்பது எந்தவிதத்தில் நியாயம் என குறிப்பிட்டுள்ளார்.