இந்தியாவின் முதல் ஆர்பிட்டல் கம்ப்யூட்டிங் செயற்கைக்கோள்.. விண்வெளியில் MOI-1A என்ன செய்யும்?
செய்தியாளர: துர்கா தேவி சரவணன்
பெங்களூருவைச் சேர்ந்த ஸ்பேஸ்டெக் நிறுவனமான Takeme2space, MOI-1A ஆர்பிட்டல் கம்ப்யூட்டிங் செயற்கைக்கோளை அக்டோபர் 1 அன்று, SpaceX-இன் Transporter-18 ரைட்ஷேர் மிஷனில் செலுத்துகிறது. MOI-1A விண்கலத்தின் எடை 50 கிலோவுக்கும் குறைவு; இதில் Nvidia Orin NX எட்ஜ்-கம்ப்யூட்டிங் சிப்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த MOI-1A விண்கலம், இந்தியாவின் முதல் ஆர்பிட்டல் கம்ப்யூட்டிங் செயற்கைக்கோள். பொதுவாக, செயற்கைக்கோள்கள் அனுப்பும் தரவுகள் (DATA) பூமியில் மட்டுமே கம்ப்யூட்டிங் எனப்படும் செயலாக்கத்திற்கு உட்படுத்தப்படும். ஆனால், இந்தச் செயற்கைக்கோள் தரவை விண்வெளியிலேயே AI மூலம் செயலாக்கி, முடிவுகளை மட்டும் பூமிக்கு அனுப்பும் திறனுடையது.
Takeme2space நிறுவனம், 2024-ன் பிற்பகுதியில் நடத்திய டெக்னாலஜி டெமோ திட்டத்தில், அப்ளிகேஷன்களை அப்லோட் செய்வது, ஆர்பிட்டிலேயே AI inference செய்வது, முடிவுகளை டவுன்லோட் செய்வது ஆகியவற்றை நிரூபித்தது. இதற்கு அடுத்து அனுப்பப்பட்டதே MOI-1 செயற்கைக்கோள். 2026 ஜனவரியில் ஏவப்பட்ட MOI-1, ISRO-வின் PSLV-C62 ராக்கெட்டின் மூன்றாம் நிலை தோல்வியடைந்ததால் இழக்கப்பட்டது. அதற்கு மாற்றாகவே இந்த MOI-1A தற்போது ஏவப்பட இருக்கிறது.
GIS நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உட்பட இந்த திட்டத்துக்கு 23 வாடிக்கையாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என Takeme2space நிறுவனர் மற்றும் CEO ரோனக் சமந்த்ராய் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார். விவசாயம், சுரங்கம், விநியோகச் சங்கிலி, காப்பீடு போன்ற துறைகளிலும் வணிகப் பயனர்கள் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் Little Place Labs நிறுவனமும் இதன் வாடிக்கையாளர்களில் ஒன்று.
வாடிக்கையாளர்கள் தங்களின் AI மாடல்களை செயற்கைக்கோளுக்கு அப்லோட் செய்யலாம். இதன்மூலம், குறிப்பிட்ட இடத்தை செயற்கைக்கோள் கடக்கும்போது, தரவைப் பகுப்பாய்வு செய்து, முழுத் தரவுத்தொகுப்பையும் அனுப்பாமல், முடிவுகளை மட்டும் பூமிக்கு அனுப்பும். இதனால் மூலத் தரவுகளை டவுன்லோட் செய்யும் செலவு குறையும். வாடிக்கையாளர்கள் தரவுகளை ஆர்பிட்டல் கம்ப்யூட் செய்ய கூடுதலாகச் செலுத்தும் தொகை, இதன்மூலம் ஈடுகட்டப்படும் எனவும் சமந்த்ராய் தெரிவித்துள்ளார். பல வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் வகையில், பெரிய அளவில் நெட்வொர்க்காக இணைக்கப்பட்ட செயற்கைக்கோள்களை உருவாக்குவதே Takeme2space நிறுவனத்தின் நீண்டகாலத் திட்டமாக உள்ளது.
இந்த MOI-1A விண்கலமானது, வழக்கமான டேட்டா சென்டராக இல்லாமல், 150 வாட் திறன் கொண்ட எட்ஜ் கம்ப்யூட்டிங் செயற்கைக்கோள். SpaceX, Starcloud போன்ற முன்னணி நிறுவனங்களும் பூமியில் உள்ள டேட்டா சென்டர்களில் இருக்கும் Nvidia சிப்களை விண்வெளிக்குக் கொண்டு செல்ல திட்டமிடுகின்றனர்.
நிதிச் சேவை மற்றும் பாதுகாப்புத் துறை வாடிக்கையாளர்களுக்கு, முக்கியமான தரவுகளை ஆர்பிட்டில் சேமிக்க கோல்ட் ஸ்டோரேஜ் (cold storage) சேவையையும் வழங்க இந்நிறுவனம் முன்வருகிறது. செயற்கைக்கோளின் பெரும்பாலான உபகரணங்களை இந்தியாவிலேயே வடிவமைத்து உற்பத்தி செய்வதாகவும், சிப்கள், சோலார் செல்கள், உந்துவிசை அமைப்புகள் ஆகியவற்றை வெளியிலிருந்து வாங்குவதாகவும் தெரிவிக்கின்றனர். கம்ப்யூட்டிங் திறனை அதிகரித்து, செலவைக் குறைக்கும் நோக்கில், 2027-ல் இந்த MOI-1A செயற்கைக்கோள்கள் இயக்கத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த MOI-1A செயற்கைக்கோள்களே, விண்ணில் இருந்தபடியே பூமியில் நடக்கும் இயற்கைப் பேரிடர்களைக் கண்டறிந்து எச்சரிக்கலாம் எனவும், மனிதர்களின் தலையீடு இல்லாமல், இந்த செயற்கைக்கோள்களே தானாக முடிவெடுத்துத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் எனவும் கூறப்படுகிறது. இதனால் பூமிக்கு அனுப்பப்படும் தரவுகளின் அளவு குறையும்; இதனால் செலவுகளும் மிச்சமாகும் எனக் கூறப்படுகிறது.

