இந்தியாவில் மாறும் மக்கள்தொகைக் கணக்குகள்.. சரியும் பிறப்புகள்; உயரும் இறப்புகள்!
இந்தியாவில் பிறப்புகளின் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளதாகவும் இறப்புகள் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்திருப்பதாகவும் இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் பிறப்புகளின் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளதாகவும் இறப்புகள் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்திருப்பதாகவும் இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் திங்களன்று பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் தொடர்பான முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் 2 கோடியே 52 லட்சம் பிறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2022ஐவிட சுமார் 2 லட்சத்து 32ஆயிரம் குறைவு. அதேபோல் 2023இல் 86 லட்சத்து 60 ஆயிரம் இறப்புகள் பதிவாகியுள்ளன. முந்தைய ஆண்டில் 86 லட்சத்து 50 ஆயிரம் இறப்புகள் பதிவாகியிருந்தன. பிறப்புகள் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் இறப்புகள் எண்ணிக்கை கூடியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் இந்திய அளவில் மிகக்குறைவான பாலின விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
அங்கு 1,000 ஆண் குழந்தைகளுக்கு இணையாக 899 பெண் குழந்தைகளே பிறக்கின்றனர். அடுத்ததாக பிஹாரில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 900 பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். தெலங்கானாவில் 906, மகாராஷ்டிராவில் 909, குஜராத்தில் 910, ஹரியானாவில் 911 மற்றும் மிசோரத்தில் 911 என பாலின விகிதம் பதிவாகியுள்ளது.
நாட்டிலேயே மிக அதிக பாலின விகிதம் கொண்ட மாநிலமாக அருணாச்சல பிரதேசம் உருவெடுத்துள்ளது. அங்கு 1,000 ஆண் குழந்தைகளுக்கு 1,085 பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். நாகாலாந்தில் 1,007, கோவாவில் 973, திரிபுராவில் 972 மற்றும் கேரளாவில் 967 என பாலின விகிதம் பதிவாகியுள்ளது. இந்தியாவில் பதிவாகும் 74.7 விழுக்காடு பிறப்புகள் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் நிகழ்கின்றன. இதன் பொருள் 25%க்கு மேற்பட்ட பிறப்புகள் வீட்டுப் பிரசவம் அல்லது உரிய மருத்துவப் பயிற்சி பெறாதவர்கள் மூலம் நிகழ்கின்றன.
வீட்டுப் பிரசவத்தின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை இது உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். நாட்டின் மூலை முட்டுக்களில் எல்லாம் மகப்பேறு சேவை சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டிய அரசின் கடமையையும் இது உணர்த்துகிறது. பிறப்பு எண்ணிக்கை சிறிய அளவில் குறைவது இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் இதேநிலை நீண்டகாலத்துக்கு தொடர்ந்தால் காலப்போக்கில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இது சமூகத்தில் பல சிக்கல்களை உருவாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.