\
Indians sell old Gold jewellery as fears of deeper correction grow
தங்கம்web

சரியும் தங்கம் விலை | நகைகளை விற்கும் இந்தியர்கள்.. பின்னணிக் காரணம் என்ன?

இந்தியர்கள் தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை விற்று லாபத்தை உறுதிசெய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Published on

மேற்கு ஆசியாவில் அதிகரித்துவரும் பதற்றங்களுக்கு மத்தியில், நாளுக்குநாள் தங்கத்தின் விலை உயர்ந்தும், சில சமயங்களில் சரிந்தும் வருகிறது. இதன்காரணமாக, இந்தியர்கள் தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை விற்று லாபத்தை உறுதிசெய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அண்மையில் 10 கிராம் தங்கம், தோராயமாக ₹1,44,199 என்ற அளவில் புதிய உச்சத்தைத் தொட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Indians sell old Gold jewellery as fears of deeper correction grow
தங்கம் விலைpt

தங்கம் விலை அதன் உச்ச வரம்பை எட்டிவிட்டதாகவும், இனிவரும் நாட்களில் மேலும் சரிந்து ₹1.2 லட்சம் வரை செல்லக்கூடும் என்றும் சந்தை நிபுணர்கள் கருதுவதாலும், இந்தியர்கள் தங்களுக்குக் கிடைக்கும் லாபத்தை இப்போதே ரொக்கமாக மாற்ற முற்படுகின்றனர். பொதுவாக இந்தியர்கள், பழைய நகைகளைக் கொடுத்து புதிய நகைகளை மாற்றுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஆனால், தற்போது விலை கணிசமாகக் குறைந்து வருவதால், அதை அப்படியே விற்று ரொக்கப் பணமாகப் பெற்றுக்கொள்ள முற்படுகின்றனர்.

அதாவது, இனி வரும் நாட்களில் மேலும் சரிவு ஏற்பட்டால் தங்களுக்குக் கிடைக்கும் பழைய நகையின் மதிப்பு குறைந்துவிடும் என்று குடும்பங்கள் கருதுவதாலேயே இத்தகைய முடிவை அவர்கள் எடுத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இந்தியத் தங்க நகைகள் மற்றும் வர்த்தகர்கள் கூட்டமைப்பின் (IBJA) தரவுகளின்படி, நடப்பு ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மட்டும் இந்தியக் குடும்பங்கள் சுமார் 50 டன் பழைய தங்கத்தை விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும், இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 43% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Why Gold Prices Are Falling Again? Reason Iran War?
தங்கம் web

இந்தியர்கள், பழைய தங்கத்தை அதிகளவில் விற்பனை செய்வதால், நாட்டின் மறுசுழற்சி தங்கம் பெரிய அளவில் உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. இது, நடப்பு ஆண்டில் 200 முதல் 250 டன்கள் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா வெளிநாடுகளில் இருந்து புதிய தங்கத்தை இறக்குமதி செய்வது கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இந்தியா உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோர்களில் ஒன்றாக இருந்தாலும், 2026 நிதியாண்டில் இந்தியா சுமார் 72.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com