ஒரே மாதத்தில் 34.61 லட்சம் கோடி லாபம் : மாயம் செய்த பங்குச்சந்தை.. வரலாற்று சாதனை படைத்த FII
அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது. இதன் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், இந்தியா உள்ளிட்ட இறக்குமதி நாடுகள் இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து உலகளாவிய பொருளாதார மந்தம் ஏற்பட்டதால், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பங்குச்சந்தை உள்ளிட்டவற்றில் இருந்து எடுத்து பாதுகாப்பான தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்தார்கள். இதனால் உலகம் முழுவதும் பங்குசந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது.
இந்தியா கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்த நிலையில், அதன் விலை அதிகரித்ததால் ரூபாயின் மதிப்பும் சரிந்தது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் இல்லாத சரிவுகளை சந்தித்தது. FII என அழைக்கப்படும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து தங்கள் பங்குகளை விற்றுப் பணத்தை வெளியே எடுத்ததால் செப்டம்பரில் 35,861 கோடி மற்றும் அக்டோபரில் 34,843 கோடி அளவுக்கு பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது.
இந்த நிலையில், இடைக்கால தேர்தலில் ட்ரம்பின் தோல்வியால் ஈரான் போர் முடிவடையும் என்ற நம்பிக்கை, டாலர் வட்டிவிகிதங்களை அமெரிக்க ஃபெடரல் வங்கி அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் உலகளாவிய பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், இந்திய பங்குச்சந்தை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது.
நவம்பர் 23-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ் ஒரே மாதத்தில் 7,976.புள்ளிகள் (10.71%) உயர்ந்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 34.61 லட்சம் கோடி அதிகரித்துள்ளதுடன், பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 508.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பங்குகளை விற்று வெளியேறி வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நவம்பரில் மீண்டும் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் பங்குசந்தையில் இதுவரை 1.27 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர். இதுவே ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச வெளிநாட்டு முதலீடாக சாதனை படைத்துள்ளது. இவ்வாறு இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

