ரயில் டிக்கெட் விதிகளில் புதிய மாற்றம்.. ஏப்ரல் 1 முதல் அமல்!
பயணிகளின் வசதிக்காக ரயில் சார்ட் தயாரிக்கும் நேரம், ரயில் புறப்படுவதற்கு 9 முதல் 18 மணி நேரத்திற்கு முன்பாகவே முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே வரும் ஏப்ரல் 1 முதல் பயண விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. இதன்படி, உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாகவே ரத்து செய்ய வேண்டும்; இல்லையென்றால், ரீஃபண்ட் கிடைக்காது. தற்போதைய 4 மணி நேரக் காலக்கெடு 8 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 8 முதல் 24 மணிநேரத்திற்குள் ரத்து செய்தால், 50 சதவீதக் கட்டணம் பிடித்தம் செய்யப்படும், 24 முதல் 72 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும், 72 மணி நேரத்திற்கு முன்னதாக: குறைந்தபட்ச ரத்து கட்டணம் போக மீதித் தொகை திரும்பக் கிடைக்கும்.
பயணிகளின் வசதிக்காக ரயில் சார்ட் தயாரிக்கும் நேரம், ரயில் புறப்படுவதற்கு 9 முதல் 18 மணி நேரத்திற்கு முன்பாகவே முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளது. மேலும், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பு வரை பயணிகள் தங்களது பயண வகுப்பை உயர்த்திக்கொள்ளவும், ஏறும் நிலையத்தை மாற்றிக்கொள்ளவும் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. கவுண்டர் டிக்கெட்டுகளை இனி எந்தவொரு ரயில் நிலையத்திலும் ரத்து செய்து கொள்ளலாம். இந்த மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

