ரயில்வே துறையில் தொழிலாளர்களின் அவலநிலை - சிஏஜி அறிக்கையில் பகீர்
ரயில்வே துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையான ஊதியங்கள் வழங்கப்படுவதில்லை என்று சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பான சிஏஜி தனது ஆண்டு அறிக்கையை கடந்த செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், ஸ்பெக்ரம் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அந்த அறிக்கையில் சிஏஜி பேசியுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீது விமர்சனங்களை முன் வைத்துள்ளது.
சிஏஜி தனது அறிக்கையில் ரயில்வே துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளது. ரயில்வே துறையில் அரசு பணியாளர்களை தாண்டி பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் விடப்பட்டு அதன் மூலம் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். 463 ஒப்பந்தங்களை ஆய்வு மேற்கொண்ட சிஏஜி ஆனது, 23 சதவீதம் தொழிலாளர்களுக்கு மட்டுமே முறையான சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
சிஏஜி தனது அறிக்கையில், “129 ஒப்பந்தங்களில் தொழிலாளர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்யவில்லை. சுமார் 3,310 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ9.23 கோடி வரை சம்பள பாக்கி இருப்பதாக தெரிகிறது. 105 ஒப்பந்தங்களில் மட்டுமே தொழிலாளர்களுக்கு சரியான சம்பளம் வழங்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல், தொழிலாளர் வைப்பு நிதி (EPFO),மருத்துவ காப்பீடு (ESIC) உள்ளிட்ட திட்டங்களும் முறையாக தொழிலாளர்களுக்கு செல்லவில்லை என்றும் சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரயில்வே துறையில் உடைமைகளை பழுது மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காகவே தொழிலாளர்கள் வெளியில் இருந்து ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுகிறார்கள்.