“காஷ்மீர் பிரச்னை: 3-ம் நபர் தலையீடு இருக்கக்கூடாது” - பிரான்ஸ் அதிபர்
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கேட்டுக் கொண்டுள்ளார்.
2 நாள் அரசு முறைப்பயணமாக பிரான்ஸ் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாரிஸ் நகர விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரிசில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இந்திய தேசியக்கொடியை ஏந்தி வரவேற்றனர். பின்னர் சான்ட்லி CHANTILLY என்ற இடத்தில் உள்ள பழமையான அரண்மனையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், நரேந்திர மோடியை கட்டியணைத்து வரவேற்றார்.
அந்த அரண்மணையின் தனி அறையில் இரு தலைவர்களும், காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விவாதித்தனர். இதைத் தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது இமானுவேல் மெக்ரான் பேசுகையில், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பின் தலையீடு இருக்கவே கூடாது என்று குறிப்பிட்டார்.