ஃபேஸ்புக்கில் அரசியல் கட்சிகள் ரூ.4 கோடிக்கு விளம்பரம்..!
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகள் விளம்பரங்களுக்காக 4 கோடி ரூபாய்க்கு மேல் இதுவரை செலவிட்டுள்ளன.
சிறிய மன்றங்கள் முதல் பெரிய தேசிய கட்சிகள் வரை சமூக வலைதளங்களை பெரிய சக்தியாக நினைக்கின்றன. தேர்தல் பிரச்சார வகைகளில் சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் என்பதும் சேர்ந்துவிட்டது. சமூக வலைதளங்களுக்கென தனி பிரிவு உருவாக்கப்பட்டு பல கட்சிகள் தங்களது பிரச்சாரங்களை தொடங்கிவிட்டன.
இந்நிலையில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சில அரசியல் கட்சித் தலைவர்களும் விளம்பரங்களை செய்துள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் 2-ஆம் தேதி வரை அரசியல் உள்ளிட்டவைகள் பற்றி 16 ஆயிரத்து 556 விளம்பரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கு அவர்கள் சுமார் 4 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பாரத் கே மான் கீ பாத் (BHARAT KE MANN KI BAAT) நிகழ்ச்சிக்கு, ஆயிரத்து 168 விளம்பரங்கள் வந்துள்ளதாகவும் அதற்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நேஷன் வித் நமோ
(NATION WITH NAMO ) நிகழ்ச்சிக்கு 52 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயும், மை கவெர்ன்மெண்ட் இந்தியா (MY GOV INDIA) திட்டத்திற்கு 25 லட்சத்து 27 ஆயிரமும் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டிருக்கிறது.
ஃபேஸ்புக்கில் பாரதிய ஜனதா கட்சி என்ற பக்கத்திற்கு 6 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஃபேஸ்புக் பக்கங்கள் சிலவற்றிற்கு 48 ஆயிரம் ரூபாய் விளம்பர செலவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ள நாடாளுமன்றக் குழு, மத்திய அமைச்சகங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் ஆலோசித்து சில வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்படும், அதனை சமூக வலைதள நிறுவனங்கள் பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.