அதானியின் துறைமுகத்துடன் ஐ.ஓ.சி நிறுவனம் ஒப்பந்தமா?- கிளம்பியது புதிய புயல்! நடந்தது என்ன?

அதானியின் துறைமுகத்துடன் ஐ.ஓ.சி நிறுவனம் ஒப்பந்தமா?- கிளம்பியது புதிய புயல்! நடந்தது என்ன?
அதானியின் துறைமுகத்துடன் ஐ.ஓ.சி நிறுவனம் ஒப்பந்தமா?- கிளம்பியது புதிய புயல்! நடந்தது என்ன?

அதானி குழுமத்திற்கு அரசின் ஒப்பந்தங்கள் பல கிடைப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் புதிதாக ஒரு துறைமுக ஒப்பந்தம் அந்நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. 

அதானி குழுமத்தில் வீசிய அடுத்த புயல்

அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமம் கடுமையான பொருளாதார சரிவைச் சந்தித்து வருவதுடன், நாளுக்குநாள் வேறு பல பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் கெளதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத் அம்பானி, சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களின் மூலம் ரஷிய வங்கியில் கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக, ஃபோர்ப்ஸ் அறிக்கை வெளியிட்டு புயலைக் கிளப்பியுள்ளது. 

முந்த்ரா துறைமுகத்தில் வெளியான போதைப் பொருள் செய்திகள்

இந்த நிலையில், அதானியின் கட்டுப்பாட்டில் இருக்கும் குஜராத் மாநில முந்த்ரா துறைமுகம் கடந்த காலங்களில் போதைப் பொருட்களால் உலக அளவில் பேசப்பட்டது. இந்த துறைமுகத்தில் இருந்துதான் பெரியளவிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், இந்த துறைமுகம் வழியாகத்தான் நாடு முழுவதும் போதைப் பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது எனவும் செய்திகள் வெளியாகின.

அதைப் பார்த்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சிகள், ”போதைப் பொருட்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பாஜக அரசு, முந்த்ரா துறைமுகத்தின் உரிமையாளர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. துறைமுகத்தில் சோதனையும் இல்லை” எனக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், தற்போது அதானி குழுமத்துக்குச் சொந்தமான கங்காவரம் துறைமுகத்தின் வாயிலாக எல்பிஜி இறக்குமதி செய்வதற்கு இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐஓசி) மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் அடுத்த புயலைக் கிளப்பியுள்ளது. 

அதானியின் கங்காவரம் துறைமுகத்தில் ஒப்பந்தம்

அரசுக்கு சொந்தமான விசாகப்பட்டினம் துறைமுகம் வாயிலாக இதுவரை எல்பிஜி இறக்குமதியை ஐஓசி மேற்கொண்டுவந்த நிலையில், இனிமேல் அதானிக்கு சொந்தமான கங்காவரம் துறைமுகத்தைப் பயன்படுத்தும் வகையில், அந்நிறுவனத்துக்கு சாதகமான அம்சங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. மேலும், ”அதானியின் கங்காவரம் துறைமுகத்தை வாடகைக்கு எடுத்திருப்பது ஏன்?” எனவும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சிகள்

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ‘‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு துறைமுகம் வழியாக எல்பிஜியை இறக்குமதி செய்து வரும் நிலையில், இந்த துறைமுகத்திற்கு பதிலாக அதானியின் கங்காவரம் துறைமுகத்தை ஐஓசி, எல்பிஜி இறக்குமதிக்கு வாடகைக்கு எடுத்துள்ளது. ஏலம் இல்லாமல் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதன்மூலம் அதானி குழுமம் தனது துறைமுக வணிகத்தை விரிவுபடுத்த பிரதமர் மோடி தன்னிடம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தி உள்ளார் என்பது தெளிவாகிறது’’ எனப் பதிவிட்டுள்ளார். மேலும், அதானி குழும துறைமுகத்துடன் ஐஓசி மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில், அந்த துறைமுகத்தில் வந்திறங்கும் எல்பிஜியை குறிப்பிட்ட காலத்துக்குள் எடுத்துச் செல்லாவிட்டால், அபராதம் செலுத்தி எடுத்துச் செல்லும் அம்சம் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அதுபோன்ற நிபந்தனை எதுவும் இல்லை என ஐஓசி விளக்கமளித்துள்ளது.

காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு ஐ.ஓ.சி. விளக்கம்

இதுதொடர்பாக ஐ.ஓ.சி. அளித்துள்ள விளக்கத்தில், “ஐஓசி இந்தியா முழுவதும் எல்பிஜி சப்ளை செய்யும் திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு துறைமுகங்களுடன் வழக்கமான ஒப்பந்தங்களை செய்துவருகிறது. இதற்காக, தனி டெண்டர் எதுவும் கோரப்படவில்லை. கண்டலா, முந்த்ரா, பிபாவாவ், தஹேஜ், மும்பை, மங்களூரு, ஹல்டியா விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், எண்ணூர் உள்ளிட்ட துறைமுகங்கள் தவிர, கேரளாவின் கொச்சியிலும், ஒடிசாவின் பாரதீப்பிலும் மேலும் இரண்டு இறக்குமதி முனையங்கள் வரவுள்ளன. நாடு முழுவதும் எல்பிஜி தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உஜ்வாலா திட்டத்திற்கு பிறகு 31.5 கோடி இணைப்புகள் உள்ளன. இதனால் துறைமுகங்களில் புதிய வசதிகள் தேவைப்படுகின்றன. வணிகரீதியாகவும் இது அவசியமாகிறது. தற்போதைய சூழ்நிலையில், கங்காவரம் துறைமுகம் பெரிய கப்பல்களைக் கையாள அனுமதிக்கிறது. இதனால் அங்கு கூடுதல் நன்மையைப் பெற முடியும். இதையடுத்து அங்கு அதிகளவில் எல்.பி.ஜிகளைச் சேமிக்க முடியும். இதற்காக அதானி குழுமத்துடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் விசாகப்பட்டினம் துறைமுகமும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

முந்த்ரா துறைமுகம் (குஜராத்), தஹேஜ் துறைமுகம் (குஜராத்), ஹசீரா துறைமுகம் (குஜராத்), டுனா முனையம் (குஜராத்), மர்மகோவா முனையம் (கோவா), காட்டுப்பள்ளி துறைமுகம் (தமிழ்நாடு), விசாகப்பட்டினம் முனையம் (ஆந்திரா), கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகம் (ஆந்திரா), விழிஞ்சம் துறைமுகம் (கேரளா), எண்ணூர் முனையம் (தமிழ்நாடு), தம்ரா துறைமுகம் (ஒடிசா), கங்காவரம் துறைமுகம் (ஆந்திரா), டிகி துறைமுகம் (மகாராஷ்டிரா) என அதானி குழுமம் 13 துறைமுகங்கள் மற்றும் முனையங்களைக் கையாளுவது குறிப்பிடத்தக்கது. 

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com