மேலும் தீவிரமடைந்து குஜராத் அருகே 18ம் தேதி கரையை கடக்கிறது டவ்-தே புயல்

மேலும் தீவிரமடைந்து குஜராத் அருகே 18ம் தேதி கரையை கடக்கிறது டவ்-தே புயல்
மேலும் தீவிரமடைந்து குஜராத் அருகே 18ம் தேதி கரையை கடக்கிறது டவ்-தே புயல்

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ் தே புயல் கேரளாவின் கடலோர மாவட்டங்களில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதால் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ் தே புயல் வரும் செவ்வாயன்று குஜராத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குமுன் 5 மாநிலங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து கேரளா, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த 2 நாட்களில் கேரளா, கர்நாடகா, கோவாவில் கடலோர பகுதிகளில் பெருமழை பொழிந்து நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அரபிக்கடலோர மாநிலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் காசர்கோடு அருகே கடற்கரை பகுதியில் புயல் தாக்கத்தின்போது மாடி வீடு இடிந்து விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது. மூசோடு கடற்கரையில் இருந்த வீட்டின் மேல்தளத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வந்தனர். ஆனால் புயல் எச்சரிக்கையை அடுத்து அவர்கள் காலி செய்த நிலையில் அந்த வீடு இடிந்து விழுந்துள்ளது.

இந்நிலையில் புயலை எதிர்கொள்வது குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஏற்கனவே புயல் காரணமாக தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. புயலை சமாளிக்க மகாராஷ்டிரா அரசும் தயாராகி வருகிறது. கடற்கரையோர மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்படும் என்பதால் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, மேலும் தீவிரமடைந்து குஜராத் அருகே 18ம் தேதி டவ்-தே புயல் கரையை கடக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com